காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி படுகை கூட்டியக்கம் சார்பில் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை திருச்சி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை மாவட்டமான தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முழுமையாக வந்து சேராத காரணத்தினால் லட்சக்கணக்கான ஏக்கர் குருவை நெல் பயிர்கள் கருக தொடங்கின. உடனடியாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட்டால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் சாகுபடியை காப்பாற்ற முடியும் எனக்கூறி தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தஞ்சாவூர் அரியலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் முழு ஆதரவு தெரிவித்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் முழு அடைப்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.



 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி குடவாசல் கூத்தாநல்லூர் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்டம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. அதே போன்று ஆட்டோக்களும் ஓடவில்லை. ஆட்டோக்கள் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்று சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோன்று திருவாரூர் விஜயபுரம் காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.



 

மேலும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று காவல்துறை வாகனங்களும் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு காரணம் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படும் 45 அரசு பேருந்துகளும் என்று இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்ட முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.