விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2- வது முறையாக இணைந்துள்ள “ லியோ ” படம், வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தில் இருந்து “ நா ரெடி” பாடல் வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய், ராப் பாடகர் அசல் கோலார் இருவரும் பாடியிருந்தனர். யூட்யூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்த இப்பாடலில் கிட்டதட்ட 1400- க்கும் மேற்பட்ட குரூப் டான்ஸர்களோடு விஜய் நடனமாடியுள்ளார்.
லியோ திரைப்படம் வரும் 19- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 18ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக கூறி மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள சினிப்பிரியா திரையரங்கம் பெயரில் போலியான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக சினிப்பிரியா திரையரங்க நிர்வாகம் தனது முக நூல் பக்கத்தில் லியோ திரைப்படம் தொடர்பாக 18-ம் தேதி மாலை சிறப்பு காட்சி என்று வெளியாகி உள்ள டிக்கெட் போலியானவை எனவும், இதனை யாரும் வாங்க வேண்டாம் எனவும் அப்படி வாங்கினால் இதற்கு திரையரங்க நிர்வாகம் பொறுப்பல்ல எனவும் சினிப்பிரியா திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியீடு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.