தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா இன்று மாநிலம் முழுவதும் திமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் திமுக கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை கோலாகலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். மயிலாடுதுறை அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனையில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு, திமுக சார்பில் வெள்ளி ஸ்பூன் பரிசளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சி 16 -வது வார்டு திமுக உறுப்பினர் சர்வோதயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ் கலந்துகொண்டு, மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் இன்று பிரசவித்த தாய்மார்களுக்கு வெள்ளி ஸ்பூனை பரிசாக வழங்கினார். முன்னதாக, அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை வழக்கறிஞர்கள் கொண்டாடினர். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர் சேயோன் தலைமையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, வழக்கறிஞர்கள், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
இதில், வழக்கறிஞர்கள் சிவதாஸ், பிரபாகரன் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர். இது போல், குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூரில், ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில், திமுகவினர், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். மேலும் மயிலாடுதுறை திமுக நகர கழகம் சார்பில், நகரமன்ற தலைவர் குண்டா மணி(எ)செல்வராஜ் தலைமையில், சின்ன கடைத்தெரு, ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறந்த குழந்தைகளுக்கு, குழந்தை பரிசு பெட்டகம், பின்னர் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில், நோயாளிகள் அனைவருக்கும், பிஸ்கட், பால், உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான நகரமன்ற உறுப்பினர்களும், கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினம் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில்
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் 70 ஆவது பீமரதசாந்தி கொண்டாடும் இந்நாளில் நல்ல திடகாத்திரம் ஆயுள் பெற்று சகலசெல்வமிக்க யோகவாழ்வும், நாட்டுமக்களுக்கு நல்லன செய்து அல்லனகடிந்து அரசாள செந்தமிழ்ச் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம் என்ற வாழ்த்துச் செய்தியுடன் தமிழக முதல்வர் உடன் தான் இருந்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
Twitter Down : முடங்கிய டிவிட்டர்; செயல்படுவதில் சிக்கல்.. தவிக்கும் பயனர்கள்.. திடீர்னு என்னாச்சு?