இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் முதலிடம் பிடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச அரங்கில் அஸ்வின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார். அவரது சுழற்பந்துக்கு விக்கெட்டை பறி கொடுக்காத பேட்ஸ்மேனே இல்லை எனும் அளவிற்கு தனது பந்து வீச்சின் மூலம் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்தக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணிகூட அஸ்வின் பந்து வீச்சினை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சியை எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அஸ்வின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டி தரவரிசையில் அஸ்வின், 864 புள்ளிகளுடன் முதல் இடத்தினை எட்டியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில், இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 558 புள்ளிகளுடன் உள்ளார்.