மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வாகனம் பள்ளியை நோக்கி வந்துள்ளது. அப்போது பள்ளி வாகனத்தை அதிவேகமாக ஓட்டுனர் இயக்கியதாகவும், அதன் காரணமாக வேன் சாலையில் உள்ள வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்துள்ளது.
அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று வேனில் சிக்கி காயம் அடைந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களை அழைத்து வர வேனில் பயணித்த இரண்டு ஆசிரியைகளை மீட்டு, சிகிச்சைக்காக ஆக்கூர் அரசு மருத்துவமனையில் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். வாய்க்காலில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
Crime: "கத்தினால் பீர் பாட்டிலால் குத்துவன்" - விழுப்புரத்தில் வாலிபரை மிரட்டி ரூ. 10,500 வழிப்பறி
தகவல் அறிந்து விரைந்து வந்த பொறையார் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பள்ளி வேன் டிரைவரை தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் வாய்க்கால்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வாகன விபத்து குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்றும், அதில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளதா என, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்டு கொள்வதில்லை என்றும், இனி வரும் காலங்களில் ஆவது பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி கல்லூரி வாகனங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உரிய முறையில் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.