மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் அதன் தலைவர் துர்காபரமேஸ்வரி (திமுக) தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. ஆணையர் வாசுதேவன் முன்னிலை வகித்தார்.இதில் தலைவர்,துணை தலைவர் உள்ளிட்ட 24 உறுப்பினர்களும் பங்கேற்றனர். 25 மன்ற பொருள் தீர்மானங்களை நிறைவேற்றிட கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்கப்பட்ட நிலையில், திமுக, தேமுதிக, மதிமுக, அதிமுக மற்றும் பாமக, சுயேச்சை உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பனர்கள் கடந்த 1ஆண்டாக உறுப்பினர்கள் கூட்டத்தில் வைத்த எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை, டென்டர் விடப்பட்ட பணிகள் ஏதும் செய்துமுடிக்கவில்லை, நகரில் குப்பைகள் அள்ளப்படாமல் கடந்த 3 மாதத்திற்கு மேலாக மலைப்போல் குவிந்துகிடக்கிறது என பல்வேறு குற்றம்சாட்டியும், அதனை சரிசெய்துவிட்டு கூட்டம் நடத்தவேண்டும் என கோரினர்.
ஆனால், தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதால், ஆத்திமடைந்த உறுப்பினர் ஒருவர் தீர்மான நகலை கிழித்து எரிந்தார். அதன்பின்னர் 12 நகர்மன்ற உறுப்பினர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன்பின்னர் மன்ற பொருள் வாசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற கூட்டம் மற்றும் தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும் எனவும், ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனக்கூறி தொடர்ந்து இரவு முழுவதும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்திலேயே உணவு அருந்திவிட்டு பின்னர், பாய், தலையணையை எடுத்து வரப்பட்டு நகர மன்ற உறுப்பின்கள் கூட்ட அரங்கில் படுத்து உறங்கினர்.
தற்போது 16 மணி நேரத்தை கடந்தும் 12 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வராமல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 -ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சூரிய பிரபா தனது 4 - மாத கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். குழந்தையும் அங்கேயே கொசுக்கடியில் உறங்க வைத்து உறுப்பினர் சூரிய பிரபா கண் விழித்து போராட்டத்தை தொடர்ந்தார். முன்னதாக சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நகர மன்ற உறுப்பினர்களிடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நடைபெற்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என 12 நகர மன்ற உறுப்பினர்களும் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் கடந்த ஒரு ஆண்டுகாலமாக சாலை வசதி, குடிநீர் மற்றும் குப்பைகள் அல்லாத அவல நிலை தொடர்வதால் நகராட்சி தலைவரையும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 24 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக நகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து போராட்டம் தொடர்ந்து வருகிறது, பதற்றமான சூழல் நிலவுவதால் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்