எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சர்வதேச அளவில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் குவித்து வரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர், விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது.


ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஷ்ரியா சரண், ரே ஸ்டீவன்சன் மற்றும் பலர் நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப்  பெற்றதோடு விருதுகளையும் குவிந்து வருகிறது. 


 



சிறந்த ஒரிஜினல் பாடல் :


அந்த வகையில் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், சிறந்த பாடல் பிரிவிலும் 'நாட்டு நாட்டு'  பாடல் கோல்டன் க்ளோப் விருதை வென்றது. மேலும் சில தினங்களுக்கு முன்னர் ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் சிறந்த ஆக்ஷன் படம், சிறந்த பாடல், சிறந்த ஸ்டண்ட் மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம் என நான்கு பிரிவுகளின் கீழ் விருது வென்றுள்ளது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.


இந்த விருதினை இயக்குனர் ராஜமௌலியும், நடிகர் ராம் சரணும் பெற்றுக்கொண்டனர். மேலும் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவின் கீழ் 'நாட்டு நாட்டு' பாடல் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் இந்தியப் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


நேரடியாக கலக்க காத்திருக்கும் ஆர்.ஆர்.ஆர் :


95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 12ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள தற்போது ஆர்.ஆர்.ஆர் ரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.


அந்த வகையில் ஆஸ்கர் விழா மேடையில் நாட்டு நாட்டு பாடல் நேரடியாக பாடப்பட உள்ளது எனும் தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ள இந்தப் பாடலை, கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகுன்ஜ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஏற்கெனவே அமெரிக்காவில் முகாமிட்டுள்ள நிலையில், தற்போது பாடகர்கள் கால பைரவா - ராகுல் சிப்லிகுன்ஜ் இருவரும் 12ஆம் தேதிக்கு முன்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல உள்ளனர்.