மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் ஊராட்சியில் ராமாமிர்தம் தெரு, குப்பையன் காலனி, சோனாந்திடல் ஆகிய தெருக்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்புக் கிடங்கு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிணறில் இருந்து எடுக்கப்படும் வாயு மற்றும் எண்ணெய் இங்கு சேமித்து பின்னர் சுத்திகரிப்பு செய்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பரிமணம் கிராமத்திற்கு அனுப்படுகிறது.
இந்நிலையில் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசியால் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு, உள்ளதாகவும், கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக குடிநீரில் கடுமையான காவி படிந்தும், எண்ணெய் கலந்தும் வருவதால் தொடர்ச்சியாக பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அதிக அளவில் சிரங்கு, தோல் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் கடந்த வாரம் இந்த தண்ணீரை பருகிய 10 க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி குத்தாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தங்கள் பகுதியில் சுகாதாரத்துறை முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இப்பகுதியில் மண் மற்றும் நீரை ஆய்வுக்கு உள்படுத்தி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதுவரை ஊராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிப்பை ஏற்படுத்தும் ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் இந்த குடிநீர் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக தெரிவித்துள்ளார்.