பேஷன் ஷோ, விளம்பர வாய்ப்பு என பல்வேறு ஆசைகளைத் தூண்டி 20க்கும் மேற்பட்ட்ட பெண்களை வலையில் வீழ்த்தி பாலியல் ரீதியாக அத்துமீறிய மாடலிங் இளைஞரை போலீசார் கைது செய்தனர்
சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முகமது சையது. சிக்ஸ் பேக், மாடலிங் என சுற்றிவந்த முகமது அடிக்கடி பேஷன் ஷோ ஏற்பாடும் செய்தும் வந்துள்ளார். இந்த பேஷன் ஷோ மூலம் முகமதுவுக்கு பல இளம் பெண்களின் தொடர்பு கிடைத்துள்ளது. பேஷன் துறையில் வேலைபார்க்கும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் நட்பு ரீதியாக முகமதுவிடம் பழகியுள்ளனர். விளம்பர வாய்ப்பு வாங்கித்தருவதாகவும், மாடலிங் துறையில் ஜொலிக்க வைக்கிறேன் எனவும் இனிக்க பேசிய முகமது தடுமாறிய பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். காதலிப்பதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது.
ஒரே நேரத்தில் மூன்று பேர்..
இந்நிலையில் 3 பெண்கள் ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்களை காதலிப்பதாக தனித்தனியாக முகமது ஏமாற்றியதாகவும், வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக வேப்பேரி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகார் கொடுத்த 3 பேரின் செல்போனில் இருந்தும் போலீசார் முகமதுவுக்கு ஒரு மேசேஜை தட்டிவிட மூன்று பேருக்குமே ஐ லவ் யூ என பதில் அளித்துள்ளார் முகமது. மூவரையும் தனித்தனி இடத்துக்கு வரக்கூறி தன்னுடைய சித்துவிளையாட்டையும் முகமது திட்டமிட்டார். இதனை அடுத்து தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்த வேப்பேரி போலீசார்முகமதுவை கைது செய்தனர்
இன்ஸ்டா மற்றும் வாட்ஸ் அப்..
முகமதுவின் இன்ஸ்டா வாட்ஸ் அப்பை போலீசார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் 20 மேற்பட்ட பெண்களை வலையில் வீழ்த்தி அத்துமீறியுள்ளார் முகமது. காதலிப்பதாக ஏமாற்றுவதும், காரில் அழைத்துச் சென்று அத்துமீறுவதும் இவரது வழக்கமாக இருந்துள்ளார். தான் மிஸ்டர் சென்னை, மிஸ்டர் இந்தியா என்றெல்லாம் கதைக்கட்டும் முகமது இளம்பெண்களை ஏமாற்றியுள்ளார். இன்ஸ்டாவில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் இவர் பேஷன் டெக் படிக்கும் இளம் மாணவிகளையும் குறி வைத்து காய்நகர்த்தியுள்ளார். தற்போது முகமதுவின் செல்போனை தீவிரமாக போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அழிக்கப்பட்ட செய்திகளையும், புகைப்படங்களையும் மீட்கும் நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்