மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று முடிவுறும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்த யோகம் ரிஷப லக்னத்தில் காலை 10 மணி முதல் 11:30 மணிக்குள் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இதற்கான கோவிலுக்கு வர்ணம் தீட்டும் பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வரும் நிலையில் இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனங்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பல லட்சம் பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள் அருட் கடாட்சம் பக்தர்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டி திருக்கடையூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை திருக்கடையூர் கோவில் அபிராமி அம்பாள் சன்னதியில் நடைபெற்றது. சென்னை மகாலட்சுமி ஏற்பாடு செய்திருந்த விளக்கு பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூஜையில் பெண்களுக்கு ஸ்வர்ண புஷ்பம், மற்றும் மங்கலப் பொருட்கள் அடங்கிய அருட் பிரசாதங்களை வழங்கினார். முன்னதாக குருமகாசன்னிதானம் கோயில் நடைபெற்ற கோ பூஜை, கஜ பூஜைகளை செய்தார்.