செயின் பறிப்பு சம்பவம்


சென்னை கொண்டித்தோப்பு பெத்தநாயக்கன் தெருவை சேர்ந்தவர் ரத்னா தேவி (58). இவர் இந்த மாதம்  17ஆம் தேதி , அவர் வீட்டு அருகே உள்ள கோயிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பும்போது இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்க செயினை பறித்து விட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் தொடர்பாக ரத்னா தேவி ஏழுக்கிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.




ரகசிய தகவல்


இந்நிலையில் இம்மாதம் 18 ஆம் தேதி மாலை கொரட்டூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், இதேபோன்று செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பி சென்றார். இதுகுறித்து கொரட்டூர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் பூக்கடை பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செயின் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.


இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சென்னை காவல்துறையினர் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏழுகிணறு பகுதியில் உள்ள தங்கப் பட்டறையில் சந்தேகத்திற்குரிய இளைஞர் ஒருவர் தங்க நகையை உருக்க வந்திருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தங்கப் பட்டறைக்கு விரைந்தனர்.


பட்டதாரி இளைஞர்


அங்கு சென்று அந்த இளைஞரை பார்த்த போது செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர் மண்ணடியை சேர்ந்த முகமது ஃபைசல் (22) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டின் பிரபலமான பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்த இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு பி‌டெக் படிப்பை முடித்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.


மேலும், கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆணழகன் போட்டிக்கு தயாரான இவர், அகில இந்திய இளையோர் ஆணழகன் போட்டியில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அளவில் தங்கம் வென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.




ஐஃபோன் வியாபாரம்


துபாயில் உள்ள நண்பர் மூலம், ஐபோன்களை வாங்கி சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளார். தொழிலில் நஷ்டம் காரணமாக பணத்தேவை அதிகரித்துள்ளது. பல நண்பர்கள்  செல்போன் வாங்கிக் கொண்டு பணம் தராமல் இவரை ஏமாற்றி உள்ளனர். இதனால், பலரிடம் கடன் பெற்றுள்ளார். அதனை திருப்பி கொடுக்க முடியாததால், கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்துள்ளனர்.


இதனால், வேறு வழியின்றி கடந்த 17-ஆம் தேதி முதன் முறையாக செயின் பறித்து, பூக்கடையில் உள்ள ஒரு கடையில் விற்றுள்ளார். அடுத்ததாக, கொரட்டூர் பகுதியில் செயின் பறித்துள்ளார். இதில் கிடைத்த பணத்தில் கடனை அடைக்க முயன்றுள்ளார். இந்நிலையில்தான் சிசிடிவி காட்சிகளில் சிக்கிய பைசல் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு உள்ளார்.