மயிலாடுதுறை மாவட்டம் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாசலில் ஆத்தா கடை என்றால் அப்பகுதி மாணவர்கள் இடையே மிகவும் பிரபலம். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆத்தா என்ற சொல் பாட்டியை குறிக்கும். மாணவர்களை தனது பேரன்கள் போல் பாவித்து லாப நோக்கு இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் ஒரு ரூபாய்க்கு பஜ்ஜி, இனிப்பு போண்டா போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார் 60 வயதான மூதாட்டி தையல்நாயகி.
30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிவாசலில் சிறு குடிசையாக தனது கடையை துவங்கிய தையல்நாயகி 25 பைசாவுக்கு பஜ்ஜும், போண்டாவும் விற்பனை செய்துள்ளார். தற்போது விண்ணை முட்டும் அளவு விலைவாசி உயர்ந்தாலும் பசியை தீர்த்து வரும் அரசு அம்மா உணவகம் போல், பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் வகையில் ஒரு ரூபாய்க்கு பஜ்ஜியும், போண்டாவையும், 10 ரூபாய்க்கு தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதமும் விற்பனை செய்து வருகிறார்.
எப்படி இது சாத்தியம் என்று மூதாட்டி தையல்நாயகி இடம் கேட்டபோது, அரசு பள்ளியில் தற்போது ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள். ஏழை எளிய குடும்ப பின்னணி கொண்ட இந்த பிள்ளைகளுக்கு தினமும் வீட்டில் இரண்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே செலவுக்கு பணம் தருவார்கள். தின்பண்டகளுக்காக அவர்களால் பெரும் செலவு செய்ய முடியாத என்பதால் லாப நோக்கம் ஏதும் இன்றி தின்பண்டங்களை விற்பனை செய்து வருகிறேன்.
இதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே தனது வாழ்வாதாரமாக உள்ள நிலையில், இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வருகிறேன்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இவரது கணவர் கலியபெருமாள் சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில், தற்போது தனது ஒரே மகனுடன் வசித்து வருவதாகவும், வாழ்நாள் வரை யாருக்கும் பாரமில்லாமல் உழைத்து வருவதாகவும் அதே நேரம் தன்னால் முயன்ற சிறு உதவியாக படிக்கும் மாணவர்களுக்கு மலிவு விலையில் தின்பண்டங்களை விற்பனை செய்து வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் ஒரு ரூபாய்க்கு சிறிய மிட்டாய்கள் கூட கிடைப்பதில்லை, அவ்வாறான சூழலில் இந்த பாட்டி லாப நோக்கமின்றி இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை வியாபாரம் என்று நாம் கூறிவிட முடியாது, ஏழை மாணவர்களுக்கு அவர் சேவை செய்து வருகிறார் என்றே கூறவேண்டும். இந்த பகுதி ஏழை மாணவர்களுக்கு இந்த பாட்டி ஒரு வரப்பிரசாதம்” என்றனர்.