தென்திருப்பதி எனப்படும் தான்தோன்றிமலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலை வீதியில் ஐந்து கால்களுடன் காட்சியளித்த அதிசய பசுமாட்டிடம் ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்றனர்.


 




 


தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர், தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். புரட்டாசி மாதம் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல் சனிக்கிழமை என்பதால் ஆன்மீக பக்தர்கள்  தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். ஆலயத்தை சுற்றியுள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் மலை வீதியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான நபர்கள் பசு மாடுகளை அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் நெரூர் பகுதியில் இருந்து முத்துச்சாமி என்பவர் லட்சுமி என்ற தனது பசு மாட்டை அழைத்து வந்திருந்தார். ஐந்து கால்களுடன் காட்சியளித்த அந்த அதிசயமான பசு மாட்டிற்கு ஏராளமான பக்தர்கள் அகத்திக்கீரை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி ஆசி பெற்றுச் சென்றனர். பலர் அந்த மாட்டை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.


சேங்கல் மலை அருள்மிகு ஸ்ரீ வாரி வரதராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி சனி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.


 




 


புரட்டாசி மாதம் என்றாலே பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை என்பது முக்கியமான நாட்களாகும். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள சேங்கல் மலையில் அருள்மிகு ஸ்ரீ வாரி வரதராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு வரதராஜ பெருமாள் மற்றும் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு பால்,பஞ்சாமிர்தம், தேன், நெய், தயிர், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




சேங்கல் மழை ஸ்ரீ வாரி வரதராஜ பெருமாளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பிறகு ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றி, அதன் தொடர்ச்சியாக உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை  நடைபெற்றது. சேங்கள்மலை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாரி வரதராஜ பெருமாள் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.