செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா... என மனதில் பதிந்த இந்த பாடலையும் ஓப்பனிங் காட்சியையும் பார்க்கவே திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அது தான் பி.ஆர். தேவராஜ் இயக்கத்தில் 1988ம் ஆண்டு வெளியான ' செந்தூரப்பூவே' திரைப்படம். இன்றுடன் இந்த எவர்கிரீன் கிளாசிக் திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மரண மாஸ் ஹிட் :
விஜயகாந்த், ராம்கி, நிரோஷா, ஸ்ரீபிரியா, ஆனந்த்ராஜ், செந்தில் மற்றும் பலர் நடித்த இப்படத்தின் கதையை எழுதி தயாரித்து இருந்தார் ஆபாவாணன். 200 நாட்களையும் கடந்து திரையரங்குகளில் ஓடி அந்த காலகட்டத்திலேயே 2.5 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைத்ததோடு அந்த ஆண்டில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படத்தில் கேப்டன் சௌந்தரபாண்டியனாக விஜயகாந்த் மிடுக்காக கம்பீரமாக நடித்திருந்தார். இதற்கு பிறகே அவர் கேப்டன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்த 'செந்தூரப்பூவே' நிச்சயம் டாப் 10 படங்களின் வரிசையில் இடம்பெறும்.
ரீல் ஜோடி டு ரியல் ஜோடி :
ராம்கி - நிரோஷா முதல் முறையாக இப்படத்தில் தான் ஜோடி சேர்ந்தார்கள். மிகவும் க்யூட்டான இந்த பிரெஷ் ஜோடி படப்பிடிப்பு சமயத்தில் எப்போதுமே எலியும் பூனையுமாக சண்டையிட்டு கொள்ளும் ராம்கி நிரோஷா இடையே நல்ல ஒரு புரிதலை கொண்டு வந்தது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. அதுவே அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து ரீல் ஜோடி ரியல் ஜோடியாக காரணமானது என கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிறகு தான் ராம்கி இளம் பெண்களின் ட்ரீம் பாயாக வலம் வந்தார்.
பழம்பெரும் நடிகர்களுக்கு அடையாளம் :
பழம்பெரும் நடிகர்களான சி.எல். அனந்தன், விஜயலலிதா உள்ளிட்டோர் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க ஒரு வாய்ப்பளித்து அடையாளத்தை பெற்று கொடுத்த திரைப்படம். பொன்னம்மாவாக ஒரு வில்லி கதாபாத்திரத்தில் கொடுமைக்கார சித்தியாக நிரோஷாவை கொடுமைப்படுத்தும் இடங்களில் வில்லத்தனத்தை கொப்பளித்து சிறப்பாக ஸ்கோர் செய்து இருந்தார்.
ஆக்ஷன் கலந்த காதல் காவியம் :
விஜயகாந்த் - ஆபாவாணன் காம்போ மிகவும் அருமையாக ஒர்க் அவுட்டாகி வெள்ளி விழா கண்ட இப்படம் முதல் அவர்கள் இருவரின் இடையிலும் நல்ல ஒரு நட்பு மலர துவங்கியது. விஜயகாந்த் ஒரு கேப்டனாக இப்படத்தில் நடித்திருந்தாலும் அதை ஒரு பிளாஷ் பேக் கதைக்கு பிறகே ஓப்பன் செய்ததோடு அவர் ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் விஷயமும் வெளிப்படுத்தப்படும். ராம்கி - நிரோஷாவின் அழகான காதலையும் அதே சமயத்தில் விஜய்காந்திற்கே உரிய ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்த படமாகவும் அமைந்து.
பதறவைத்த கிளைமாக்ஸ் காட்சி :
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தான் படத்தின் ஹைலைட். பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைத்த அந்த காட்சியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. படம் பார்த்த ஒவ்வொரு பார்வையாளரையும் பதைபதைக்க வைத்த கிளைமாக்ஸ் காட்சி கொண்ட படம் இதுவாகவே இருக்கும். மிகவும் ரிஸ்க் எடுத்து விஜயகாந்த் நடித்த இந்த ஆக்ஷன் காட்சியை மிஞ்ச இதுவரையில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஆக்ஷன் காட்சியும் அமையவில்லை எனலாம். நடிகர்களுடன் சேர்ந்து ரயிலும் படத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது என சொல்லும் அளவிற்கு ஏராளமான ரயில் காட்சிகள். ரயிலில் தான் படமாக்கப்பட்டதா என்ற பிம்பத்தையே கொடுத்தது.
காலத்தால் அழியாத பாடல்கள் :
எம்.எம்.ரெங்கசாமியின் ஒளிப்பதிவும் மனோஜ் - கியான் இசையும் படத்திற்கு பெரும் பக்கபலமாக அமைந்தன. கிளியே இளம் கிளியே, செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா, சோதனை தீரவில்லை உள்ளிட்ட பாடல்கள் வெகுஜன மக்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட் வெற்றி பாடல்களாக அமைந்தன. காலத்தால் அழியாத 'செந்தூரப்பூவே...' பாடல் 80'ஸ் காலகட்டத்தை நினைவுபடுத்துகிறது.