மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு பகுதியில் 1972 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல் மூட்டைகள் லாரிகளில் மூலம் இந்த அரிசி ஆலைக்கு அரவைக்காக கொண்டு வரப்பட்டு அரைக்கப்படுகிறது. ஆலையில் நிலை1, நிலை2 என நெல் பதப்படுத்துல் மற்றும் அரவைப்பகுதிகள் உள்ளன.
நெல்லை அவியல் செய்து உலர வைத்த பின்பு, அரைத்து பின்னர் அரிசியாக்கி மூட்டைகளாக கிடங்கில் பாதுகாத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கும் பணிகள் நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 100 டன் நெல் இந்த ஆலையில் அரைக்கப்படுகிறது. அவ்வாறு நெல்லை அரைக்கும் போது நெல் உமிதுகள், கரிதுகள்களாக மாறி அந்த பகுதி முழுவதும் காற்றில் பறக்கிறது. இதனால் கும்பகோணம் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் கரித்துகள்கள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் கரித்துகள் விழுவதும், அதன் காரணமாக அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.
மேலும் இப்பகுதியில் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் கேன்சர், உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும். வீடுகள், விவசாய நிலங்கள், குடிநீர் உள்ளிடவற்றில் கரித்துகள்கள் படர்வதாகவும், இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதியடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருவதை அடுத்து கரித்துகள் காற்றில் பறக்காத வகையில் நவீனப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கையும் வைத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை அரசு இது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
இந்த நவீன அரிசி ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழியை மீறி சுற்றுப்புற சூழல் விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பாக பொதுமக்களுக்கு கடும் உபாதைகளையும் சிரமத்தையும் உண்டாகும் சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்துவதையும், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் கண்டனம் தெரிவித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் கிராம பொது நல சங்கம் மற்றும் கிராமவாசிகள் கரிதூள்களை தட்டில் அள்ளிவைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி நடத்திய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் ஆனாலும் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.