உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களுக்கு வழங்கப்படும் தங்க பந்து விருதை, அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள் 6 முறை கைப்பற்றியுள்ளனர்.
உலகக்கோப்பை தொடர்:
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி இந்தியாவின் 10 நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உட்பட ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்ல தங்களை தயார்படுத்தி வருகின்றன. உள்ளூரில் நடைபெறுவதால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்ற இந்தியா சற்று கூடுதலாகவே தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர்களுக்கு வழங்கப்படும், தங்க பந்தை இதுவரை யார் யார் வென்றுள்ளனர் என்பதை இங்கு அறியலாம். 1975ம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற 12 உலகக்கோப்பை தொடர்களில் 6 முறை ஆந்திரேலிய வீரர்கள் தான் அந்த பரிசை வென்றுள்ளனர். அதிலும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ளதோடு, 2019ம் ஆண்டு தொடரில் 27 விக்கெட்டுகளை எடுத்து ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையயும் தக்கவைத்துள்ளார்.
01. கேர் கில்மர்:
1975ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், இரண்டு பேர் தங்க பந்து விருதை வென்றனர். அந்த தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேரி கில்மர் வெறும் இரண்டே போட்ட்களில் விளையாடி 11 விக்கெட்டுகளை சாய்க்க, மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த மெர்னர்ட் ஜுலியன் 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை சாய்த்தார். இருப்பினும், அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருது, இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
02. மைக் ஹென்றிக் - இங்கிலாந்து
1979ம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த மைக் ஹென்றிக் என்பவர் இந்த விருதை வென்றார். அந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் 10 விக்கெட்டுகளை சாய்த்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
03. ரோஜர் பின்னி - இந்தியா:
1983ம் ஆண்டு இந்திய அணி முதன் முறையாக உலகக்கோப்பையை வென்றதில், முக்கிய பங்கு வகித்தவர் ரோஜர் பின்னி. அந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர், 18 விக்கெட்டுகளை சாய்த்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 4 பேரை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம், உலகக்கோப்பை தொடரில் தங்கப்பந்து வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ரோஜர் பின்னி பெற்றார்.
04. கிரெய்க் மெக்டெர்மோட் - ஆஸ்திரேலியா:
நான்காவது உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் உலகக்கோப்பையை வென்றது. அந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய கிரெய்க் மெக்டெர்மோட் 8 போட்டிகளில் களமிறங்கி, 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஒரு 5 விக்கெட்ஸும் அடங்கும். இதன் மூலம், அவர் தங்கப் பந்து விருதை தனதாக்கினார்.
05. வாசிம் அக்ரம் - பாகிஸ்தான்:
1992ம் ஆண்டு சிறந்த கேப்டனாக செயல்பட்டு பாகிஸ்தான் அணிக்கான முதல் உலகக்கோப்பையை வென்றதோடு மட்டுமின்றி, அந்த தொடரில் பந்துவீச்சாளராகவும் ஜொலித்தார் வாசிம் அக்ரம். அந்த தொடரில், 10 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி தங்கப் பந்து விருதை வென்றதோடு, இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.
06. அனில் கும்ப்ளே - இந்தியா:
1996ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் தோல்வியுற்று வெளியேறியது. இருப்பினும் அந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, தங்கப் பந்து விருதை வென்றார் அனில் கும்ப்ளே. அந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்ததற்கான விருதையும் சக இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கர் தான் கைப்பற்றினார்.
07. ஜெஃப் அலாட், ஷேன் வார்னே:
1999 உலகக் கோப்பையில், நியூசிலாந்தைச் சேர்ந்த ஜியோஃப் அலாட் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்னே ஆகியோர் தங்கப் பந்து விருதைப் பகிர்ந்து கொண்டனர். அந்த தொடரில் அலோட் மற்றும் வார்னே ஆகிய இருவரும் போட்டியில் தலா 20 விக்கெட்டுகளை கைப்பற்றினர்,
08. ஜெமிந்தா வாஸ் - இலங்கை:
2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் ஜெமிந்த வாஸ், 10 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்ஸ் எடுத்ததும், மற்றொரு போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்ததும் அடங்கும்.
09. க்ளென் மெக்ராத் - ஆஸ்திரேலியா:
2007ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ளென் மெக்ராத், 11 போட்டிகளில் மொத்தம் 26 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2019ம் ஆண்டிற்கு முன்பு வரை, ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையையும் மெக்ராத் பெற்றிருந்தார்.
10. ஜாகீர் கான், ஷாஹித் அப்ரிடி:
2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஜாகீர் கான், ஷாஹித் அப்ரிடி ஆகியோர் தலா 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முதலிடம் பிடித்தனர். இதனையடுத்து, இந்த இரு பந்து வீச்சாளர்களுக்கும் தங்க பந்து விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த தொடரில் இரண்டாவது முறையாக இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
11. மிட்செல் ஸ்டார்க்- ஆஸ்திரேலியா:
2015ம் ஆண்டு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் ஆகிய இருவரும் தலா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி, தங்கப் பந்து விருதைப் பகிர்ந்து கொண்டனர். 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், 10 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சகநாட்டு விரரான மெக்ராத்தின் சாதனையை, ஸ்டார்க் முறியடித்தார்.