மயிலாடுதுறையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் இணைந்து நடத்தும் அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, தேசிய ஊட்டச்சத்து மாதம் ஆகியவை குறித்த 2 நாட்கள் டிஜிட்டல் மற்றும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொங்கிவைத்தார். அப்போது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உடனிருந்தனர். தொடர்ந்து மூவரும் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளும், அதேபோல், கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, குழந்தைகளில் குள்ளத்தன்மை, எடைக்குறைவு உள்ளிட்ட குறைபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஊட்டச்சத்து உணவுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்குரிய ஊட்டச்சத்து உணவுகளை வழங்கவும், ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசானது அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் நோக்கமே தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கி அவர்களின் கல்வி இடைநிற்றலை தடுப்பதற்காகவே ஆகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 692 அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 38 ஆயிரத்து 367 குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள்.
7 Years Of Aandavan Kattalai : வாழ்க்கை ஒரு ஒட்டகம்... 7 ஆண்டுகளை நிறைவுசெய்யும் ஆண்டவன் கட்டளை
மேலும், 2,428 பாலூட்டும் தாய்மார்கள், 3819 கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான, ஆரோக்கியமான உணவு, தூய்மையான குடிநீர், சுகாதார தாய்மை, மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சரியான உணவு ஊட்டும் பழக்க வழக்கங்களில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.தொடர்ந்து, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ ஊட்டச்சத்து மருந்தினையும் மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினர்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மத்திய மக்கள் தொடர்பகம் திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் கே.தேவி பத்மநாபன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சியாமளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துச்சாமி, மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர உதவியாளர்கள் அருண்குமார், ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.