மயிலாடுதுறை வந்த முத்தமிழ் தேருக்கு ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் கடந்த நவம்பர் 4 -ம் தேதி புறப்பட்டது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இந்தப் பயணத்தை, அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஸ், மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முரசு கொட்டித் தொடங்கிவைத்தனர்.
எழுத்தை மூச்சாகக் கொண்ட கருணாநிதி பயன்படுத்திய பேனாவடிவில் ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது புகைப்படங்கள் ஊர்தியின் வெளியே இடம்பெற்றுள்ளன. அவரது சிறப்புகளை விளக்கும் குறும்படத்தை திரையிடும் வகையில் ஒளித்திரையும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் இந்த ஊர்தியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது. வாகனத்தின் உள்ளே முன்னாள் முதல்வர் கருணாநிதி வசித்த கோபாலபுரம் இல்ல உள்வடிவமும், அதில் அஞ்சுகம் அம்மாள்சிலையும், அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்த அலங்கார ஊர்தி, வரும் டிசம்பர் 4-ம் தேதி சென்னையை சென்றடைகிறது. இந்நிலையில் இந்த முத்தமிழ்தேர் வாகன ஊர்தி பல்வேறு மாவட்டங்களை கடந்து மயிலாடுதுறைக்கு நேற்று வருகை தந்தது. அதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்க ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் பல்வேறு தரப்பினரும் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அனைவரும் முத்தமிழதேர் உள்ளே சென்று கலைஞரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்து, கலைஞரின் படைப்புகளை கண்டு ரசித்தனர். ஏராளமானோர் வாகனங்களின் முன்பு நின்று தங்களின் செல்போனில் படம்பிடித்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.