கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலய திருத்தேரோட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயம் புகழ்பெற்ற முருகன் ஆலயமாகும். சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும். அதற்கேற்ப சிக்கல் ஆலயத்தின் சூரசம்ஹார விழா கடந்த அக்டோபர் 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  தேரோட்டம் காலை நடைபெற்றது. 

 



இதனையொட்டி இன்று காலை முருகபெருமானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சிவ வாத்தியங்கள் முழங்க ஆலயத்தின் நான்கு ரதவீதிகளில் திருத்தேர் வலம் வந்தது. அப்போது பெண் பரத கலைஞர்கள் தேரில் முன்பு இசைக்கு ஏற்ப பரதம் ஆடி செல்ல அங்கு பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் நாகை, கீழ்வேளுர், சிக்கல் மற்றும் சுற்று வட்டாரப் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 



 

இன்று இரவு நடைபெறும் சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சூரனை சம்ஹாரம் செய்ய சிங்காரவேலவர் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அப்போது சிங்காரவேலவருக்கு முத்து முத்தாக வியர்வை சிந்தும் காட்சி வேறு எங்கும் காண முடியாத அரிய காட்சியாகும். இவ்விழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் ஒன்றியம் மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.