IND Vs Aus CWC Final: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் வீரர்களில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன் சேர்த்த விரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றனர்.


இந்தியா - ஆஸ்திரேலியா பைனல்:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 13வது உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 2003ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கு, ஆஸ்திரேலியாவை பழிவாங்கும் நோக்கில் இந்திய அணி களமிறங்க உள்ளது. உள்ளூரில் நடைபெறுகிறது என்பதோடு, பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:


சர்வதேச போட்டிகளில் மட்டுமின்றி ஐசிசி தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணி பல தசாப்தங்களாகவே தொடர்ந்து கோலோச்சி வருகிறது.  அந்த அணி 5 முறை ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல, ஆஸ்திரேலியாவில் இடம்பெற்று இருந்த உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் முக்கிய காரணம்.  ஆனால், அந்த அணியையே பேட்டிங்கில் மிரட்டுவது இந்திய பேட்ஸ்மேன்கள் தான். அதற்கு சான்றாக தான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, அதிக ரன் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் இந்திய வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 71 போட்டிகளில் விளையாடி 3077 ரன்களை குவித்துள்ளார். 


ஆஸ்திரேலியா அச்சுறுத்தும் ரோகித் சர்மா:


இந்த பட்டியலில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். அதன்படி, இதுவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, இரண்டாயிரத்து 332 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 8 சதங்கள் மற்றும் ஒன்பது அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 209 ரன்களை சேர்த்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நடப்பு உலகக் கோப்பையின் லீக் போட்டியில் டக்-அவுட் ஆகியிருந்தாலும், இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா நிச்சயம் ஆஸ்திரேலிய  அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என நம்பப்படுகிறது.


கிளாஸில் அசத்தும் விராட் கோலி:


மறுமுனையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோலியும், ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறார். அந்த அணிக்கு எதிராக 46 இன்னிங்ஸ்களில் விளையாடி இரண்டாயிரத்து 313 ரன்களை குவித்துள்ளார். அதில், 8 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 123 ரன்களை சேர்த்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 200-க்கும் அதிகமான பவுண்டரிகளை அடித்த, வீரர்களின் பட்டியலில் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.


கே.எல். ராகுல் & ஜடேஜா:


சச்சின், ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகிய ஜாம்பவான்கள் மட்டுமின்றி, கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜா போன்ற இந்திய வீரர்களுகும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கே.எல். ராகுல் 15 போட்டிகளில் விளையாடி, 6 அரரைசதங்கள் உட்பட 625 ரன்களை விளாசியுள்ளார். நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிகு எதிரான இந்தியாவின் முதல் லீக் போட்டியில், கேல். எல். ராகுல் 97 ரன்கள் சேர்த்து அட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 16 போட்டிகளில் விளையாடி 533 ரன்களை குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதே பாணியில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு, மூன்றாவது முறையாக கோப்பையை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.