தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வானம் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்வேன் என்று மிரட்டி அவ்வபோது சாரல் மழை பொழிந்து வருகிறது.

 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நேற்று அவ்வபோது ஆங்காங்கே மழை லேசாக பெய்தது. இன்று தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது.

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.  கருமேகங்கள் சூழ மழை பெய்வேன் என்று மக்களை மிரட்டும் வகையில் அவ்வப்போது தூறலாக பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மஞ்சளாறு பகுதியில் அதிகபட்சமாக 41.60 மி. மீ. மழை பதிவாகி உள்ளது. அதேபோல் தஞ்சாவூரில் 3.10,  குருங்குளத்தில் 1,  பூதலூரில் 2, திருக்காட்டுப்பள்ளி 1.60, கல்லணையில் 0.60, ஒரத்தநாட்டில் 14, நெய்வாசல் தென்பதியில் 13.60, வெட்டிக்காட்டில் 6, கும்பகோணம் 15,  பாபநாசத்தில் 7.30, அய்யம்பேட்டையில் 32, திருவிடைமருதூரில் 34.40, கீழ் அணைக்கரை 36.80, பட்டுக்கோட்டையில் 8, அதிராம்பட்டினத்தில் 6.10 ஈச்சன் விடுதியில் 2, மதுக்கூரில் 12.60,  பேராவூரணியில் 2 என மொத்தமாக 211.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக 10.08 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தகவல் தெரிவித்துள்ளது.