சீர்காழி அருகே ஜாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி படிப்பு பாதியில் தடைப்படுவதை தடுக்க தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என இருளர் மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தர்மதானாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்குடி மெயின் ரோட்டில் சுமார் 10 குடும்பத்தைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் நான்கு தலைமுறைக்கு மேலாக இப்பகுதியில் வசிக்கின்றனர். இவர்களின் மூதாதையர்கள் காட்டுப்பகுதியில், மலைப்பகுதியிலும் தங்கள் வாழ்க்கையை நடத்தி அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்ந்துள்ளனர்.
Madhya Pradesh New CM: பரபரப்பான அரசியல் சூழல்; மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகிறார் மோகன் யாதவ்
இவர்களுக்கு படிப்பறிவு இல்லாமல் காட்டு பகுதிகளில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது இந்த இருளர் இன மக்கள் நகரத்தை நோக்கி வந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அன்றாட தேவைக்கு பல்வேறு வகையான கூலி வேலைகளுக்கு சென்று அவர்களின் வாழ்கையை கடந்துகின்றனர். இந்த சூழலில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க அனைத்து வசதிகள் இருந்தும், ஜாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி படிப்பை முழுமையாக முடிக்க முடியுமா பாதியில் நிறுத்தி விட்டு கூலி தொழிலை நோக்கி அழைத்துச் செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், ஓட்டு போடுவதற்காக ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு, வங்கி புத்தகம் என அனைத்தும் இருந்தும், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் மட்டும் கிடைக்கவே இல்லை எனவும், இது தொடர்பாக பலமுறை தாலுக்கா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்து இடங்களுக்கும் சென்றும் தங்களுக்கு பலன் இல்லை என ஆதங்கம் தெரிவிக்கும் இவர்கள் மேலும், அரசு அலுவலர்கள் தங்களை உதாசீன பொருளாக நினைத்து அலைகழித்து விடுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது தங்களது வாழ்க்கை ஜாதி சான்றிதழ் இல்லாமல் கேள்விக்குறியாக உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் படிப்பு இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது சிரமம் என்பதை உணர்ந்து தங்களின் குழந்தைகளை படிக்க வைத்தாலும், பள்ளியில் பாதி தூரம் சென்ற நிலையில் இந்த ஒரு ஜாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் இருந்து வெளியேற்றி விடுவதாகவும், இதனை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உடனடியாக தலையிட்டு தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தங்களுக்கு இருக்கக்கூடிய பகுதியில் நாங்கள் மூன்று தலைமுறையாக இருந்தும், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்றும், அரசு வழங்கக்கூடிய இலவச வீடு கட்டும் திட்டத்தில் தங்களுக்கு பட்டா வழங்கி வீடுகள் கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைக்கு அரசு இனிவரும் காலங்களிலாவது செவிசாய்க்குமா...?