மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கும் பணிகள் வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 


மிக்ஜாம் புயல் பாதிப்பு:


மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு பிறகு, சென்னை மீண்டு வந்துள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக உயிர் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது.


கொரோனா காலத்தில் முன்னணியில் இருந்து போராடியதை போல, தற்போதும் திமுக அரசு முன்னணியில் இருந்து மக்களை மீட்க போராடியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவித் தொகைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை சில எதிர்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.  செம்பரம்பாக்கம் ஏரியில் நீரினை பகுதியாக வெளியேற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு செய்தது போல ஸ்டிக்கர் ஒட்டும் பணியை செய்யாமல், தேவையான மக்களுக்கு நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. 


நிவாரணம் எப்படி?


2015 வெள்ளத்தின் போது 10 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால் 5 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. தற்போது 5060 கோடி ரூபாய் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிதியை அண்ணாமலை கேட்டு பெற்றுத் தர வேண்டும்.  அதன் பின் அவர் பேச வேண்டும்.  கடந்த 2015 ல் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது அரசின் தொடர் நடவடிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு, தாலுகா வாரியாக நிவாரணம் வழங்கப்படும்” என கூறியுள்ளார்.  


6 ஆயிரம் நிவாரணம்:


தொடர்ந்து பேசிய அவர், “ மிக்ஜாம் புயலில் போது 400 மிமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பதிவானது. ஆனால் முக்கிய சாலைகளில் சில மணி நேரங்களிலேயே நீர் வடிந்து சென்றது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக செயல்படுத்தியதான் மழைநீர் சில மணி நேரத்திலேயே வடிந்து விட்டது.


கொரோனா காலத்தில் அதிமுக அரசு வெறும் ரூ.1000 வழங்கியது, ஆனால் அதிமுக அரசு கஜானா காலி செய்திருந்தால் கூட தற்போது ரூ. 6000 நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் நேரடியாக களத்தில் சென்று நிலமையை கேட்டறிந்தார். ஒவ்வொரு மண்டலத்திற்கும்  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என நியமனம் செய்து களப்பணியில் திமுக அரசு உள்ளது. இதன் காரணமாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.  


எண்ணூர் கசிவு:


மேலும், “ எண்ணூர் எண்ணை கசிவு தொடர்பாக அமைச்சர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார், அந்த கழிவுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ரூ.5000 கோடி மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. நாளை மத்திய குழு ஆய்வு செய்த பின் இறுதியான மதிப்பீடு செய்யப்பட்டும் மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்கப்படும். மிக்ஜாம் புயல் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கீடு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.