திருவாரூரில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிலும் மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் வயல்வெளியில் நடக்கும் அவலம். பத்தாண்டுகளுக்கு மேலாக தொடரும் சோகம்.

 

திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ளது கூட்டுறவு வளாகம். இங்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம், பொதுவிநியோகத் திட்ட அலுவலகம், கூட்டுறவு மேலாண்மை நிலையம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகம் என ஐந்து அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு கல்லூரி இங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் நகை மதிப்பீடு கணினி உதவியாளர் மற்றும் கூட்டுறவு சம்பந்தமான கல்லூரி படிப்புகளை 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இங்கு உள்ள ஐந்து அலுவலகத்தில் 120 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினந்தோறும் அலுவலகத்திற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது குறித்த சந்தேகங்களை கேட்பதற்கு வந்து செல்கின்றனர் மேலும் நியாய விலை கடை மற்றும் விவசாய பயிர்க் கடன் குறித்த குறைபாடுகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்பதற்காக ஒரு நாள் ஒன்றுக்கு 100 பேர் வந்து செல்கின்றனர்.



 

அதேநேரத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வளாகத்திற்கு சாலை வசதி என்பது முற்றிலுமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து அரசிற்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இங்குள்ளவர்களின் வேதனையாக உள்ளது. இதன் காரணமாக கல்லூரிக்கு வரக்கூடிய மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு போகாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடலாம் என்ற கருத்தை தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் சொந்த பணத்தில் 70 ஆயிரம் மதிப்பில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது இந்த சாலையும் மழைக்காலங்களில் முற்றிலுமாக சேதமடைந்து விடுகிறது. இதனால் பெரும்பாலான மாணவ மாணவிகள் மற்றும் ஊழியர்கள் வயல் வெளியில் நடந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் கல்லூரியில் கர்ப்பமான பெண்களும் பயின்று வருகின்றனர் அவர்களும் இந்த வழியில் வருவதால் கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாம்பு உள்ளிட்ட பூச்சிகள் கடித்து பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.



 

மேலும் கூட்டுறவு வளாகத்தை சுற்றிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுகள் முழுவதுமாக தேங்கி இருக்கிறது. மழை பெய்தால் இந்த சாலையில் நடக்க முடியாத நிலை உருவாகியுள்ளது இந்த வழி முழுவதுமாக மின்சார வசதி இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை இங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையாக தெரிவிக்கின்றனர். உடனடியாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு. சாலை அமைப்பதற்கான நிதி குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கூட்டுறவுத்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய சாலை அமைக்கப்படும் என தெரிவித்தனர்.