மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் டாடா ஏசி வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மழை நின்ற பிறகும் வெள்ளநீர் வடியாததால் பொதுமக்கள் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் கூட பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை மக்களுக்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். அந்த வகையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் டாடா ஏசி வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
500 கிலோ அரிசி, பாய், போர்வை, பிஸ்கட், சீனி, கோதுமை, ரவை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டீத்தூள், தண்ணீர்பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சென்னையில் உள்ள மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்திற்கு மாவட்டத் தலைவர் குட்டிகோபி தலைமையில் பொறுப்பாளர்கள் டாட்டா ஏசி வாகனத்தில் பொருள்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.