மத்திய பிரதேசத்தில் முதலமைச்சராக மோகன் யாதவ்  தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு பதிலாக இவரை பா.ஜ.க. தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மத்தியில் ஆளும் பாஜக, கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்தது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி கட்சியினர் மத்தியிலும் ஊடகங்களிலும் பேசுபொருளானது. இந்நிலையில்தான் மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் முதலமச்சராக இருந்த சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான அரசாங்கத்தில் உயர்கல்வி அமைச்சராக இருந்த மோகன் யாதவ், உஜ்ஜைன் தக்சின் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


உஜ்ஜைன் மாவட்டத்தில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் மோகன் யாதவ். 58 வயதான மோகன் யாதவ் பாஜக மேலிடத்தால் முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளது, இதற்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும் மோகன் யாதவின் முன்னோடியாகவும் உள்ள சிவராஜ் சிங் சவுகானின் அரசியல் பயணம் குறைந்தபட்சம் மாநிலத்தில் முடிவுக்கு வருவதாக கட்சி வட்டாரத்தில் கருதப்படுகின்றது. 


அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக,  கட்சியை மேலும் வலுப்படுத்தவும், உட்கட்சியில் விரிசல் வராமல் வலுவாக வைத்திருக்கவும் பாஜக மேலிடம் ஜகதீஷ் தியோரா மற்றும் ராஜேஷ் சுக்லா ஆகியோரை துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்துள்ளது. 


கடந்த மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்ட மூன்று முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் மத்திய விவசாய அமைச்சராக பொறுப்பு வகித்த நரேந்திர சிங் தோமர், மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். பண்ணை சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின் போது அமைச்சகத்தை வழிநடத்திய தோமர், முன்னாள் முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுகானுக்குப் பிறகு உயர் பதவி வழங்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டன. 


மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வரலாற்று சாதனையை படைத்தது. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்து மத்திய பிரதேசம் யாராலும் தகர்க்க முடியாத தனது அரசியல் கோட்டை என மீண்டும் நிரூபித்துள்ளது. 


மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்பதில் தொடர் கேள்வி கட்சித் தரப்பில் . கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக முதலமைச்சர் பொறுப்பு வகித்த  சிவராஜ் சிங் சவுகான், முதலமைச்சராக நீடிப்பாரா அல்லது வேறு ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படுமா என்ற கேள்வி கட்சியினர் மத்தியில் இருந்தது. இந்நிலையில் மோகன் யாதவ்  முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு மத்திய அரசியலில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.