Annamalai: பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை செல்லாதது ஏன்? திட்டமிட்ட புறக்கணிப்பா? காரணம் என்ன?
இன்று பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருக்கும்போது அண்ணாமலை வரவேற்க செல்லாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலைய பன்னாட்டு முனைய திறப்பு விழா, சென்னை-கோவை வந்தே பாரத் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். பல்வேறு வளர்ச்சிப்பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று பிற்பகல் ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார் பிரதமர் மோடி.
முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் பயணம்:
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக சென்னையில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று முதலே பாஜக நிர்வாகிகள் அவற்றை பார்வையிட்டு வருகின்றனர். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின்போது, ஒருவரின் வருகை இல்லாமல் இருந்தது பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான். மோடியின் பயணத்தை முன்னிட்டு நேற்று முதலே பல்வேறு கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பாஜக மூத்த தலைவர்கள் மேற்கொண்டபோதிலும், நேற்றிலிருந்தே அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங். இன்று, சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு தலைவர்கள் வந்திருந்தாலும், அங்கும் அண்ணாமலை காணப்படவில்லை.
சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழாவிலும், சென்னை - கோவை வந்தே பாரத் தொடக்க விழாவிலும் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. இது, அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது.
மோடியை புறக்கணித்தாரா அண்ணாமலை?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மோடியின் நிகழ்ச்சியை அண்ணாமலை புறக்கணித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையா? என தொடர் கேள்விகள் எழுந்து வந்தது.
இதுகுறித்து தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கர்நாடக தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை டெல்லிக்கு தேர்தல் பணி காரணமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணி நிமித்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நீலகிரிக்கு நாளை பிரதமர் மோடி செல்லும்போது அங்கு அண்ணாமலை செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட சென்னை வந்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்நதுறை அமைச்சர் பியூஸ் கோயலை அண்ணாமலை சந்திக்கவில்லை.
பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் டெல்லி புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பாகத்தான் சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருக்கும்போது அண்ணாமலை வரவேற்க செல்லாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.