கரூரில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற கரும்பு சாலையில் விழுந்தது; போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
நொய்யல், வாங்கல் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர், விளைந்த கரும்புகளை வெட்டிச்செல்வதற்காக புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர்: புகளூர் சர்க்கரை ஆலைக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற கரும்பு சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் நொய்யல், தளவா பாளையம், கடம்பன்குறிச்சி, என்.புதூர், வாங்கல் மற்றும் பல்வேறுச பகுதிகளில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். விளைந்த கரும்புகளை வெட்டிச்செல்வதற்காக புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் ஈரோடு மாவட்டம் சிவகிரி, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக பதிவு செய்துள்ளனர்.
புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு ஈரோடு மாவட்டம் ,கரூர் மாவட்ட பகுதியில் இருந்து லாரிகள் மற்றும் இரட்டை டிப்பருடன் கூடிய டிராக்டர்கள் மூலம் கரும்புகள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து லாரியில் அளவுக்கு அதிகமாக கரும்பு பாரங்களை ஏற்றிக் கொண்டு புகளூர் சர்க்கரை ஆலைக்கு கொடுமுடி -புகளூர் செல்லும் சாலையில் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியில் அதிக அளவில் கரும்பு பாரங்களை ஏற்றி சென்றதால் புகழூர் நகராட்சி உழவர் சந்தை அருகே லாரி சென்றபோது லாரியில் இருந்த கரும்புகள் மளமளவென தார் சாலையின் குறுக்கே கீழே கொட்டியது. அதைப் பார்த்த லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக லாரிக்கு பின்னால் எந்த ஒரு இருசக்கர வாகனமும் மற்ற வாகனமும் வராததால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
தார் சாலையின் குறுக்கே கரும்புகள் கொட்டி கிடந்ததால் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புகளூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், கரூர் செல்லும் அனைத்து வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தார் சாலையின் குறுக்கே கிடந்த கரும்புகளை இயந்திரம் மூலம் ஓரமாக ஒதுக்கி போக்குவரத்திற்கு வழி செய்தனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.