சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு எதிர்பார்த்த தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் தோல்விக்கான காரணங்களை விவரிக்கும் விரிவான அறிக்கையை கட்சியின் மேலிடத்திற்கு மாநில நிர்வாகிகள் சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது.
அதில்,வினாத்தாள் கசிவு, அரசுப் பணிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தியது, அரசு நிர்வாகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் தலையீடு, உட்கட்சி மோதல் உள்ளிட்ட காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 62-ல் பாஜக வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 33 தொகுதிகள் மட்டுமே பா.ஜ.க.வுக்கு கிடைத்தது. அங்கு எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2017, 2022 ல் நடந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. வரும் 2027-ல் நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இருந்தாலும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் உட்கட்சி மோதல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் தோல்வியால் அங்குள்ள கட்சி நிர்வாகிகளை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024 - பா.ஜ.க. பின்னடைவு
மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி-காங்கிரஸ் கூட்டணி 80 மக்களவைத் தொகுதிகளில் 43 இடங்களைப் பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதுவே 2019-ல் பா.ஜ.க. 64 இடங்களை பெற்றது. இந்த தோல்வி குறித்து அம்மாநில பா.ஜ.க. 15 பக்க விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அயோத்தி மற்றும் அமேதி போன்ற முக்கிய தொகுதிகளில், கட்சியின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு கிட்டத்தட்ட 40,000 பேரிடமிருந்து கருத்துகள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, இந்தத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வாக்கு 8 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிகிறது. அதோடு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மக்களவைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற அதீத நம்பிக்கையுடன் இருந்ததையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உத்தரப் பிரதேச மாநில ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களின் தலையீடு உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை; கட்சியின் நிர்வாகிகளின் முடிவை செயல்படுத்த வேண்டும் என்பதுபோல அம்மாநிலத்தில் கட்சியின் நிலை இருப்பது உட்கட்சி மோதலை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த மூன்றாண்டுகளில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு சம்பவம் 15 முறை நடந்துள்ளது. இது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி பேசுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அரசு வேலைகளுக்கும் நடைபெறும் தேர்வுகளில் நேர்மை இல்லை என்பது மக்களிடன் அதிருப்டியை ஏற்படுத்தியது. இதுவரை அரசு இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பேசுபொருளாகியுள்ளது.
- குர்மி மற்றும் மெளர்யா ஆகிய சமூகங்கள் பா.ஜ.க. விற்கான ஆதரவை இந்த தேர்தலில் வழங்கவில்லை. இதனால பா.ஜ.க.விற்கு வாக்குகள் குறைந்துள்ளது. அதோடு, கட்சி தொண்டர்களுக்கு இடையே உயர்ந்த மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரிடையே அதிருப்தி நிலவுகிறது. கட்சித் தலைவர்கள் இதில் தலையிட்டு எல்லாரும் சமம் என்பதை உறுதிப்படுத்தி தேர்தலுக்கான பணிகளை கவனம் செலுத்துவதை நோக்கமாக கொள்ள வேண்டும்.
- தலித் வாக்குகள் இம்முறைகள் பா.ஜ.க.விற்கு கிடைக்கவில்லை. 10 சதவீதம் வாக்குகள் குறைந்துவிட்டன. தேர்தல் வாக்கு சேகரிப்பின்போது இடஒதுக்கீடுக்கு எதிரான கட்சித் தலைவர்களின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பழைய பென்சஞ் திட்டம், அக்னிவீர், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை வயதானவர்களையும், இளைஞர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
வாரணாசி தொகுதியில் 28 தொகுதிகளில் 8-ல் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ப்ராஜ் தொகுதியில் 13-ல் 8 இடங்களை பெற்றது. யோகி ஆதித்யநாத் கோட்டையாக கருதப்பட்ட கோரக்பூரில் பா.ஜ.க. 13 தொகுதிகளில் 6-ல் மட்டுமே வென்றது. அயோத்யாவில் 16-க்கு 7 இடங்கள் என மிகவும் மோசமான வெற்றியை பதிவு செய்துள்ளது. கான்பூர், பண்டெல்காந்த் ஆகிய தொகுதிகளில் கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை கூட பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது.
துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு, “அரசைவிட அமைப்பு பெரியது. அமைப்பைவிட பெரியவர் யாரும் இல்லை” என்று தெரிவித்திருந்தார். இது யோகி ஆதித்யநாத் குறிப்பிடுவதுபோல இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். உ.பி.யில் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் கணிசமாக உள்ளதால், அதை பெற வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க. புதிய செயல்திட்டங்களை வகுக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். அதோடு, உ.பி.-யில் கட்சி நிர்வாகிகளை மாற்ற பா.ஜ.க. தலையிடம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.