மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு ஒரு பக்தி விழா, இதில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறியதாக விமர்சனம் எழுந்துள்ளது.
 
முருகப்பெருமானின் பாடலுக்கு ஏற்ப கலை நிகழ்ச்சிகள்
 
மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. மதியம் மூன்று மணிக்கு  மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாநாட்டில் தமிழக முழுவதிலும் இருந்த வந்திருந்த ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டிற்கு தமிழக முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான  இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் பாஜகவினர், முருக பக்தர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மாநாடு தொடங்கிய நிலையில் முருகப்பெருமானின் பாடலுக்கு ஏற்ப பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
 
6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
 
இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு கார்த்திகையில் தீபம் ஏற்ற வேண்டும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேசன் சிந்தூரை நடத்திய பிரதமருக்கு நன்றி, திருப்பரங்குன்றம் மலையை காக்கும் வகையில் குன்றம் குமரனுக்கே, கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும், வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் இந்து வாக்குகளை ஒன்றாக இருக்க வேண்டும், இந்துக்கு எதிரான அரசியல்கட்சிகளை புறக்கணிக்க வேண்டும், மாதம்தோறும் எல்லோர் வீட்டிலும் கோயிலிலும் சஷ்டி நாளில் கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும். ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மாநாட்டில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது, மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த உத்தரவை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.