Iran USA: ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக்கூடாது? என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

”யுரேனியம் பாதுகாப்பா இருக்கு”

ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியின் மூத்த ஆலோசகர் அலி ஷம்கானி, ”ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா அலை அலையாக வான்வழித் தாக்குதல்கள் நடத்திய போதிலும், அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு பாதுகாக்கப்பாக” இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சமூகவலைதள பதிவில், "அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டாலும், விளையாட்டு முடிந்துவிடவில்லை, வளப்படுத்தப்பட்ட பொருட்கள், உள்நாட்டு அறிவு, அரசியல் நிலைத்திருக்கும. அரசியல் மற்றும் செயல்பாட்டு முயற்சி இப்போது புத்திசாலித்தனமாக இருக்கும். ஆச்சரியங்கள் தொடரும்!" என குறிப்பிட்டுள்ளார். 

”அமெரிக்காவிற்கு பதிலடி”

வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு முதல் முறையாக உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், பதற்றங்கள் அதிகரிப்பதற்கு வாஷிங்டனே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், "அமெரிக்கர்கள் தங்களது ஆவேசத்திற்கு பதிலடி பெற வேண்டும்" என்று பெஷேஷ்கியன் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் கூறியதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ மேற்கோள் காட்டியது.

மேலும், "ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் விரோத நடவடிக்கைகளுக்குப் பின்னால் அமெரிக்கா முக்கிய காரணியாக உள்ளது என்பதை இந்த தாக்குதல் காட்டுகிறது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இயலாமையைக் கண்ட பிறகு அமெரிக்கா தாக்குதலில் இணைந்தது" என்று பெஷேஷ்கியன் கூறியதாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளார்.

”சீனா தலையிட கோரிக்கை”

அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியைத் மூட ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, "சீன அரசாங்கம் தங்கள் எண்ணெய்க்காக ஹார்முஸ் ஜலசந்தியை பெரிதும் நம்பியிருப்பதால், அதைப் பற்றி அவர்களிடம் பேச வேண்டும். ஹார்மூஸை மூடினால் அது மற்றொரு பயங்கரமான தவறாக இருக்கும். அவர்கள் அப்படிச் செய்தால் அது அவர்களுக்கு பொருளாதார தற்கொலை. அதைச் சமாளிப்பதற்கான விருப்பங்களை நாங்கள் வைத்திருக்கிறோம், ஆனால் மற்ற நாடுகளும் அதைப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏன் வரக்கூடாது?

இதனிடையே, ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக்கூடாது? என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான சமூகவலைதள பதிவில், “ஆட்சி மாற்றம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது???” என கேள்வி எழுப்பியுள்ளார். ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஹார்மூஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி ஒரு முக்கியமான கடல்சார் பாதையாகும், இதன் மூலம் உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவிகிதம் பயணிக்கிறது. அதன் மிகக் குறுகிய இடத்தில் 33 கிமீ அகலம் கொண்ட இந்த குறுகிய கால்வாய், ஈரானை அரேபிய தீபகற்பத்திலிருந்து பிரிக்கிறது மற்றும் பாரசீக வளைகுடாவை அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது.