இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் குறித்து பேசியுள்ள அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டால், அதற்குப் பிறகு தாக்குதல்களை தொடர மாட்டோம் எனவும், அதே சமயத்தில் அவ்வளவு சீக்கிரமும் முடித்துவிட மாட்டோம் என்றும் கூறியுள்ளார். அவரது நோக்கம் என்ன.? பார்க்கலாம்.

Continues below advertisement

நெதன்யாகு தெரிவித்திருப்பது என்ன.?

ஈரான் உடனான போர் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரானிடம் உள்ள அச்சுறுத்தும் வகையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை அழிப்பதே தங்கள் நோக்கம் என தெரிவித்துள்ளார். மேலும், போரை நீட்டித்துக்கொண்டே போக விரும்பவில்லை என்றும், அதே சமயத்தில் நோக்கங்கள் நிறைவேறாமல் போரை முடித்துவிட மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

ஈரான் எங்களை அழிக்க நினைக்கிறது என்பதில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், எங்கள் இருப்புக்கு உறுதியான அச்சுறுத்தலாக உள்ள இரண்டையும், அதாவது பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை ஒழிக்கவே இந்த ஆபரேஷனை தொடங்கியதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அந்த நோக்கத்தை மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், மிக மிக விரைவில் அதை முடித்துவிடுவோம் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

Continues below advertisement

மேலும், அமெரிக்காவின் பங்க்கர் பஸ்டர் குண்டுகளால், ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளம் மிகவும் சேதமடைந்திருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது எனவும், எந்த விலை கொடுத்தாவது தங்களை காத்துக்கொள்ள டெஹ்ரான் சபதம் எடுத்துள்ளது என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கு உள்ளது என்பது குறித்து தெரியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதை தாங்கள் மிகவும் நெருக்கமாக பின்தொடர்ந்து வருவதாகவும், அணுசக்தி திட்டத்திற்கு அதுதான் மிகவும் முக்கியமான கூறு என்றும் அவர் கூறியுள்ளார்.

அணுசக்தி திட்டத்திற்கு அது மட்டுமே முக்கியமானதோ, போதுமானதோ அல்ல, ஆனால் அதுவும் அவசியம் என்றும், அதுபற்றிய சுவாரஸ்யமான தகவல் தங்களிடம் உள்ளதாகவும், ஆனால் அதை பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.

யுரேனிய செறிவூட்டல் மையங்கள் மீது, ஜூன் 13-ம் தேதி தாங்கள் முதல் தாக்குதலை நடத்தும் வரை, 60 சதவீத அளவிற்கு ஈரான் யுரேனியத்தை தூய்மையாக செறிவூட்டி முடித்திருந்ததாக தெரிவித்த நெதன்யாகு, 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, 3.67 சதவீத வரம்பு விதிக்கப்பட்ட நிலையில், அணுகுண்டு தயாரிப்பதற்கான 90 சதவீத தூய்மைப்படுத்துதலுக்கு இன்னும் சிறிதளவே ஈரான் முயற்சி செய்ய வேண்டியிருந்ததாகவும், 2018-ல் இந்த ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் விலகும் வரை ஈரான் அந்த ஒப்பந்தத்தை மதித்ததாகவும் அவர் கூறினார்.

ஈரான் தெரிவித்தது என்ன.?

ஒருபுறம் இஸ்ரேல் இவ்வாறு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி மையங்களில் எதுவுமே இல்லை என்றும், ஏற்கனவே அங்கிருந்த அனைத்தையும் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாகவும் ஈரான் ஏற்கனவே கூறியுள்ளது.

இஸ்ரேல் இதை அறியுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், தாங்கள் நெருக்கமாக பின்தொடர்ந்து வருவதாக நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், ஈரானின் இந்த கூற்று குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதை பார்க்கும்போது, போர் இப்போதைக்கு முடியாது என்றே தோன்றுகிறது.

அமெரிக்கா வேறு களத்தில் இறங்கியிருப்பதால், தற்போது 3-ம் உலகப் போர் மூண்டுவிடுமோ என்பதே அனைவரின் அச்சமாகவும் உள்ளது.