Damascus Church Attack: சிரியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரே காரணம் என, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்ச்சில் தற்கொலைப்படை தாக்குதல்:
சியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அருகே உள்ள ட்வைலாபகுதியில் அமைந்துள்ள, மார் எலியாஸ் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையின்போது தற்கொலைப்படையினரின் வெடிகுண்டு தாக்குதல் அரங்கேறியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 63 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புபடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழிபாட்டின் போது கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்திற்குள் நுழைந்து தாக்குதலை நிகழ்த்தியதாக சிரியா அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்திற்குள் நுழைந்த பிறகு தனது உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக, தனது கையில் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பலரை தீவிரவாதி சுட்டதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் இஸ்லாமியவாத தலைமையிலான கிளர்ச்சியாளர்களால் வீழ்த்தப்பட்ட பிறகு, டமாஸ்கஸில் நடந்த முதல் வெற்றிகரமான ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை குண்டுவெடிப்பு இதுவாகும்.
தோல்விகளுக்குப் பிறகான முதல் தாக்குதல்:
தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் ஈடுபட்டதாகவும், ஆனால் ஒருவர் மட்டுமே வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாகவும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிளார்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பல்வேறு தாக்குதல் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியுற்ற நிலையில், முதல்முறையாக இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலால் தேவாலயத்தின் உட்புறத்தில் கடும் சேதத்தை ஏற்பட்டுள்ளது. ரத்தக்கறை படிந்த தரைகள், உடைந்த பீடங்கள், டிந்து விழுந்த கட்டுமான பொருட்கள் தொடர்பான காட்சிகள், வெடிகுண்டு தாக்குதல் எவ்வளவு தீவிரமானது என்பதை காட்டுகிறது.
க்ரீக் நிர்வாகம் கடும் கண்டனம்:
”சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள மார் எலியாஸ் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் நடந்த வெறுக்கத்தக்க பயங்கரவாத தற்கொலை குண்டுவெடிப்பை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்," என்று கிரேக்க வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், கிறிஸ்தவ மற்றும் பிற மத சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிரியாவின் இடைக்கால அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இடைக்கால அரசு உறுதி:
அசாத்தை வீழ்த்துவதற்கான திட்டத்தை வழிநடத்திய பின்னர் ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த அதிபர் அகமது அல்-ஷாரா, சிரியாவின் மாற்றத்தின் போது மத சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு அந்த வாக்குறுதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல், அசாத்தின் ஆட்சியின் போது மதச் சிறுபான்மையினரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு குறிவைத்ததை பிரதிபலிக்கிறது. இதில் 2016 இல் சயீதா ஜைனாப்பில் ஷியா யாத்ரீகர்களைத் தாக்கிய கொடிய குண்டுவெடிப்பும் அடங்கும். இரண்டு மனித வெடிகுண்டுகள் மற்றும் ஒரு கார் குண்டு கொண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திய அந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.