சீர்காழி ரயில் நிலையத்தில் தண்ணீர் பிடிக்க இறங்கிய பயணி மீண்டும் ரயிலில் ஏறாததால் புறப்பட்டு சென்ற ரயில் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
நாள்தோறும் சென்னையில் இருந்து திருச்சிக்கு சோழன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சோழன் விரைவு ரயிலானது சென்னையில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு மாலை 3 மணிக்கு சென்றடையும். சென்னையில் புறப்பட்டு தாம்பரம், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சென்றடைகிறது. இந்த நிலையில் வழக்கம் போல சோழன் விரைவு ரயில் இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு சீர்காழி ரயில் நிலையத்திற்கு மதியம் 12.00 மணியளவில் வந்துள்ளது.
பாதியில் இறங்கிய பயணி
சென்னையில் ஏறிய பயணி ஒருவர் திருச்சிக்கு செல்வதற்காக அந்த ரயிலில் வந்துள்ளார். இந்நிலையில் அவர் சீர்காழி ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் குடிப்பதற்கு தண்ணீர் பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். பின்னர் தண்ணீர் பிடித்து விட்டு மீண்டும் ரயில் ஏறும் முன்பே ரயில் புறப்பட்டு சீர்காழி ரயில் நிலையத்தை கடந்து 100 மீட்டர் தொலைவிற்கு சென்றது. அந்த பயணி கொண்டு வந்த பை உள்ளிட்ட உடமைகள் அனைத்தும் ரயில் உள்ளதால் பயணி என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்து நின்றார்.
ரயிலை பாதியில் நிறுத்திய டிடிஆர்
அப்பொழுது ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த டிடிஆர் பயணி கை காட்டுவது அறிந்து ரயிலை நடு வழியில் நிறுத்தினார். இதனால் ரயில் இருந்த பயணிகள் ஏன் ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் பாதியில் நின்றது என தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பயணி சீர்காழி ரயில் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் நின்ற ரயிலில் ஓடி சென்று டிடிஆரிடம் விளக்கத்தை அளித்து மீண்டும் ரயில் ஏறி திருச்சிக்கு சென்றார்.
Watch Video: உயிருக்கு போராடிய பெண்! பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற குடும்பம் - என்ன காரணம்?
மூடப்பட்ட ரயிவே கேட்
சீர்காழி ரயில் நிலையம் அருகே சீர்காழி நகரத்தை இணைக்கும் விதமாக ரயிவே கேட் ஒன்று அமைந்துள்ளது. இதனால் சீர்காழியை ரயில்கள் கடக்கும் போதும், சீர்காழி ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும் போதும் ரயிவே கேட் மூடப்படும். இந்த சூழலில் இன்று பயணி ஒருவருக்காக ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால், வழக்கமாக கேட் மூடும் நேரத்தை கடந்து நீண்ட நேரம் மூடும் நிலைமை ஏற்பட்டது. இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். தொடர்ந்து தாமதமாக சோழன் விரைவு ரயில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.