ரூ.5 கோடி மதிப்புள்ள அரவணை பாயாம் அழிக்கப்படுவதற்கான டெண்டர் அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம் போர்டு (Travancore Devaswom Board) வெளியிட்டுள்ளது. 


ஏலக்காயில் பூச்சிக்கொல்லி மருந்து


சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அரவணை பாயாசம்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதில், அரிசி, சர்க்கரை, பழம், நெய், ஏலக்காய் மற்றும் சீரகம் உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன. சபரிமலை பக்தர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாகும். கோயிலில் வழங்கப்படும் அரவணை பாயசத்தில் சேர்க்கப்படும் ஏலக்காயில் பூச்சுக்கொல்லி பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஏலக்காய் விளைச்சலில் பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்து தெரிவித்தது. பூச்சிக்கொல்லி கலந்த விதைகள் அடங்கிய பாயாசத்தை விநியோகிக்கக் கூடாது என்று தேவஸ்தான வாரியத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் பயன்படுத்தும் ஏலக்காய் தரமற்றது என்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூச்சுக்கொல்லி  சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் சபரிமலையில் அரவணை உற்பத்தி நிறுத்தப்பட்டது.


6.65 லட்சம் பாயாச டின்கள் அழிக்க முடிவு


இந்நிலையில், அரவணை பாயச கேன்களை பம்பைக்கு வெளியே கொண்டு சென்று அறிவியல் பூர்வமாக அழிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிபந்தனை விதித்துள்ளது. பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தாத வகையில் அரவணை பாயச டின்களை அழிக்க தேவஸ்தானம் போர்டு டெண்ட்ர் விடுத்துள்ளது. 


சபரிமலை பகுதியில் அரவணை பாயச கேன்களை யானைகள் விரும்பு சாப்பிடும் என்பதால் அவற்றை பம்பைக்கு வெளியே கொண்டு சென்று அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐயப்பன் உருவம் பொறித்த அரவணை பாயச கேன்களின் பாகங்களை அழிப்பது பக்தர்களை புண்படுத்தும் என்பதால் பொதுவெளியில் அழிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்டெய்னர்கள் காலாவதி ஆகிவிட்டால் அவற்றை பாதுகாப்பாக கையாளவும் அறிவுத்தப்பட்டுள்ளது. அகற்றும் இடத்தில் சுகாதாரம், சுற்றுச்சூழல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ முதன் முறையாக பெரிய அளவிலான பாயாச டின்களை அறிவியல் முறைப்படி அழிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. யானைகளின் கவனத்தை ஈர்க்கும்படியாக இல்லாமலும், பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கும் அளவு இல்லாமலும் இருக்க வேண்டும் என்று உறுதி செய்துள்ளோம். இதற்கு தேவையாக இருக்கும் பண செலவு குறித்து இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.” என்று தெரிவித்தார்.