LSG IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில், லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.


மும்பை - லக்னோ மோதல்:


ஐபில் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன. இதில் மும்பை அணி ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. அதேநேரம், பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல லக்னோ அணிக்கு இன்னும் மெல்லிய வாய்ப்புள்ளது. இதனால், வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டி லக்னோ அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.


லக்னோவின் தற்போதைய நிலை:


லக்னோ அணி தற்போதைய சூழலில் 13 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளை பெற்றுள்ளது. அதன் மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன்ரேட் விகிதம் - 0.787 ஆக உள்ளது. ஒரு வேளை இன்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும், முதல் மூன்று இடங்களில் உள்ள கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு எந்த பிரச்னையயும் தராமல் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை பூர்த்தி செய்யும்.  


லக்னோ பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கா?


குஜராத் அணியுடனான ஐதராபாத்தின் நேற்றைய போட்டி, மழையால் கைவிடப்படமால் இருந்தால் லக்னோ அணிக்கான வாய்ப்பு சற்று வலுவானதாக இருந்து இருக்கும். ஆனால், போட்டி கைவிடப்பட்டதால், ஐதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் தற்போது நான்காவது இடத்திற்கு சென்னை, பெங்களூர், டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மும்பை அணியுடனான போட்டியில் லக்னோ அணி பிரமாண்ட வெற்றி பெற்றாலும், அதிகபட்சமாக 12 புள்ளிகள் மற்றும் -0.377 ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள டெல்லி அணியை பின்னுக்கு தள்ள வேண்டும். 


சென்னை Vs பெங்களூர்:


ஒருவேளை லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறினாலும், அவர்களின் நிலையானது நாளை நடைபெற உள்ள சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவை சார்ந்தே அமையும். சென்னை அணி 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பெங்களூர் அணி 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது. நாளைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். குறிப்பிட்ட வரம்புகளுடன் வெற்றி பெற்றால், பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற்விடும். ஒருவேளை போட்டி மழையால் கைவிடப்பட்டாலும், சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இதனால், இனி லக்னோ அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சன உண்மை.