17வது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் பேட் கம்மின்ஸ். இவரது சிறப்பான கேப்டன்சியால் ஹைதராபாத் அணி மூன்றாவது அணியாக ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹைதராபாத் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு மீண்டும் தயாராகியுள்ளது. 


ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக செயல்பட்டு ஐசிசிஒருநாள் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை இந்தியாவுக்கு எதிராக வென்று அசத்தினார். இதில் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு எதிராக இந்தியாவிலேயே வென்று அசத்தியிருந்தார். கிரிக்கெட்டினை கொண்டாடும் இந்திய ரசிகர்களுக்கு இது மனதில் பெரிய வலியைக் கொடுத்திருந்தாலும், பேட் கம்மின்ஸை அனைவரும் பாராட்டினர். இப்படியான நிலையில், நடப்பு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஹைதராபாத் அணி பேட் கம்மின்ஸை ரூபாய் 20.75 கோடிக்கு வாங்கியது. இவரது தலைமையிலான ஹைதராபாத் அணி பல சாதனைகளை ஐபிஎல் வரலாற்றில் படைத்துள்ளது. 






இந்திய ரசிகர்கள் இவர் மீது கொண்ட மதிப்பினை நாளுக்கு நாள் தனது ஸ்போர்ட்மேன் ஷிப் மூலம் உயர்த்திக் கொண்டே வருகின்றார். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்ற பேட் கம்மின்ஸ் அங்கிருந்த  மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறிப்பாக ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் பேட் கம்மின்ஸின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 






ஹைதராபாத் அணி இதுவரை மொத்தம் 13 லீக் போட்டிகளை எதிர்கொண்டு அதில், 7 போட்டிகளில் வெற்றி பெற்று, அதில் 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் 15 புள்ளிகளைப் பெற்று ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தினை எட்டுவதற்கான வாய்ப்பினை ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியுடன் வரும் 19ஆம் தேதி மோதவுள்ளது.