சீர்காழி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் பெட்ரோல் டேங்க் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு மீனவர்கள் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. மாவட்டத்தில் முக்கிய தொழில்களாக மீன்பிடியும், விவசாயமும் இருந்து வருகிறது. மீனவர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் நாள்தோறும் மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து தொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்.
U19 WC 2024: இந்திய அணியின் அடுத்த ரோகித், கோலிக்கான தேடல்! ஜொலிப்பார்களா U19 இந்திய வீரர்கள்?
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த அகோரமூர்த்தி, தர்மராஜ், பார்த்திபன், ஜீவானந்தம், சித்திரை வேலு உள்ளிட்ட ஆறு பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கடற்கரையில் இருந்து சுமார் 20 நாட்டிகல் தூரத்தில் நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களது பைபர் படகின் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் படகு தீ பற்றி எரிந்தது.
இதனையடுத்து படகில் இருந்த ஆறு பேரும் தீக்காயங்களுடன் கடலில் குதித்து சத்தம் போட்டு உள்ளனர். இவர்களின் சத்தம் கேட்ட அருகில் இருந்த மற்ற மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்தனர். அதனை தொடர்ந்து காயமடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நல் வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் இன்றி அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து கடலோர காவல் படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தீ விபத்தால் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், ஊர் பஞ்சாயத்தார்கள் வேலை நிறுத்த அறிவிப்பு விடுத்துள்ளதை அடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த தீ விபத்தில் சேதமான படகின் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் என மீனவர்கள் தெரிவித்துள்ளார். நடுக்கடலில் படகின் பெட்ரோல் டேங்க் வெடித்து படகு எரிந்து ஆறு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பெரும் சேதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.