புதுச்சேரியில் விடுமுறை:
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22ம் நடைபெற உள்ளது. இதை மத்திய அரசு மிகப்பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்துள்ளது. அயோத்தி கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பல மாநிலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 22ம் தேதி அங்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
நவோதய வித்யாலயா பள்ளி ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வினையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 20ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 649 நவோதயா வித்யாலயா பள்ளிகள் உள்ளன. புதுச்சேரியில் நான்கு நவோதயா பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சேர கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் விண்ணப்பித்த மேகாலாயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், அருணாச்சலபிரதேசம், திபாங் பள்ளதாக்கு, இமாச்சலபிரதேசம் உள்பட பல பகுதிகளுக்கு நவம்பர் 4ம் தேதி ஆறாம் வகுப்பிற்கு நுழைவுத் தேர்வு முதற்கட்டமாக நடந்தது.
நாளை விடுமுறை:
பிற மாநில மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வு நாளை 20ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.அறிவு திறன் -50 மதிப்பெண், எண்கணித அறிவு தேர்வு-25, மொழியறிவு-25 என, மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு 2 மணி நேரம் நடக்க உள்ளது.
இத்தேர்வினையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 20ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 3ம் தேதி பள்ளிகள் இயங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவினை பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி பிறப்பித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, குடமுழுக்கு விழா தொடர்பான கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும் நோக்கில் பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 22ம் தேதியன்று விடுமுறை அளித்துள்ள மாநிலங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம்:
ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலமே முற்றிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை தீபாவளி போன்ற பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
கோவா:
உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து கோவாவிலும் ராமர் கோயில் குடமுழுக்கினை கொண்டாட, ஜனவரி 22ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலையை நிறுவுவது என்பது நாடு தழுவிய உற்சாக நிகழ்வு என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். அன்றைய நாளை தீபாவளியை போன்று கொண்டாடவும் பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
மத்திய பிரதேசம்:
மத்தியப் பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவித்து, பண்டிகை அலைகளை ஊக்கப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மோகன் யாதவ். மேலும், மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் அன்றைய நாளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்:
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடும் வகையில், சத்தீஸ்கரிலும் ஜனவரி 22ம் தேதி அன்று அரசு பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா:
நாடு தழுவிய கொண்டாட்ட அலையில் சேரும் நோக்கில், ஹரியானாவிலும் ஜனவரி 22ம் தேதி அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித விழாவையொட்டி அன்றைய நாளில் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.