இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் முன்னாள் கேப்டன் விராட்கோலியும், இந்நாள் கேப்டன் ரோகித்சர்மாவும் ஆவார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளின் வெற்றிகளில் இவர்களின் பங்கு அளப்பரியது ஆகும். கடந்த உலகக்கோப்பைத் தொடரிலும் அதை காண முடிந்தது.


அடுத்த கோலி, ரோகித்துக்கான தேடல்:


இவர்கள் இருவரும் அவர்களது கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்திய அணியில் தொடர்ந்து ஆடுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதையடுத்து, இளம் பட்டாளத்தை உருவாக்க பி.சி.சி.ஐ. தொடர்ந்து இளையவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி வருகிறது.


தற்போது உள்ள இந்திய அணியில் ரோகித்சர்மா மற்றும் விராட் கோலி அளவிற்கு நிகரான வீரர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை. அதேபோல, சச்சின், கங்குலி இருந்தபோது அவர்களுக்கு பிறகு தோனி, யுவராஜ் இருந்தனர். இவர்களுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக விராட்கோலி மற்றும் ரோகித்சர்மா அசத்தி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு அடுத்து சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வீரர்கள் இல்லை என்பதே உண்மை ஆகும்.


வாய்ப்பை பயன்படுத்துவார்களா இளம் வீரர்கள்?


ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் இருந்தாலும் அவர்கள் பார்ம் அவுட், காயம் காரணமாக தடுமாறி வருகின்றனர். சுப்மன்கில் மட்டுமே நம்பிக்கை தரும் வகையில் ஆடி வருகிறார். அவரும் கடந்த டெஸ்ட் தொடரில் தடுமாறினார். இந்திய அணி ரோகித்சர்மா மற்றும் விராட்கோலி இல்லாவிட்டால் மிகவும் மோசமாக தடுமாறி வருவதை பார்க்க முடிகிறது.


இதனால், தற்போதைய அணியில் சற்று அனுபவம் மிக்க கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் ஆகியோர் தங்களை இன்னும் மெருகேற்ற வேண்டியது அவசியம் ஆகும். இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், ரிங்குசிங், கிஷான், ஷிவம் துபே ஆகியோரும் தங்களது திறமையை தொடர்ந்து நிரூபிக்க வேண்டியது அவசியம் ஆகும்.


19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை:


இந்த நிலையில், இந்திய அணிக்காக சிறந்த இளம் வீரர்களை கண்டறியும் வகையில் இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்திய அணியின் ஜாம்பவனாக இன்று அசத்தும் விராட்கோலி 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்றவர். ஜடேஜா, ஆர்.பி.சிங் ஆகியோரும் ஒரு காலத்தில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக ஆடியவர்கள்.


தற்போது தென்னாப்பிரிக்காவில் களமிறங்க உள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் வீரர்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய அணியின் கேப்டனாக களமிறங்க உள்ள உதய் சஹரன், அர்ஷின் குல்கர்னி, அரவெல்லி அவினாஷ், முஷீர்கான், ராஜ் லிம்பானி, செளி பாண்டே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


சஹரன், முஷீர்கான்:


கேப்டன் உதய் சஹரன் வலது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் பஞ்சாப் அணிக்காக ஆடியவர். பஞ்சாப் அணிக்கான 14 வயதுக்குட்பட்ட அணி, 16 வயதுக்குட்பட்ட அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.


முதல் தர கிரிக்கெட்டில் அதிக அனுபவம் கொண்ட முஷீர்கான் சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார். பிரியன்ஷூ மோலியாவும் முதல் தர கிரிக்கெட்டில் அசத்தலான அனுபவத்தை கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு பலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரோடா அணிக்காக மகாராஷ்ட்ரா ப்ரிமீயர் லீக்கில் ஆடிய முஷீர்கான் 3 போட்டிகளில் மட்டும் ஆடி 19 சிக்ஸர்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவர் ஐ.பி.எல். தொடரில் அசத்தம் சர்ப்ராஸ் கான் தம்பி ஆவார்.


அசத்துவார்களா?


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ள குல்கர்னி,  அரவெல்லி அவனிஷூம் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக, அவனிஷ் ஒரு போட்டியில் 376 ரன்கள் இலக்கை நோக்கி 5 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுடன் தத்தளித்தபோது, தனி ஆளாக 93 பந்துகளில் 13 சிக்ஸருடன் 163 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தவர்.


இந்த திறமையான வீரர்களுக்கு மத்தியில் இந்திய அணியின் வருங்கால நட்சத்திரம் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை தொடரில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய அணி:


உதய் சஹரன், அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரமாயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷூ மோலியா, முஷீர்கான், அரவேலி அவனிஷ்ராவ், செளமி குமார் பாண்டே, முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன், தனுஷ் கௌடா, ஆரத்யா சுக்லா, ராஜ் லிம்பானி மற்றும் நமன் திவாரி.