தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வனவிலங்களை வேட்டையாடுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 25 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, வெடிகுண்டு வைத்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய மேலும் ஒருவரை காவல்துறையில் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காடுவெட்டி பகுதியில் பெரியகுளம் அரண்மனைக்கு சொந்தமான புளியந்தோப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாட்டுக் கொழுப்புக்குள் நாட்டு வெடிகுண்டுகளை உள்ளே வைத்து, புளியந்தோப்பில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பாதுகாப்பு கிராம காவல் தலைவருக்கு வந்த தகவலை அடுத்து, கிராம காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்ற பொழுது அங்கு விலங்குகளை வேட்டையாடுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் பலஇடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வனவிலங்கை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்துவிட்டு தப்பி ஓட முயன்ற, இரண்டு நபர்களை விவசாய கிராம காவல் குழுவினர் விரட்டிச் சென்றபோது அதில் ஒரு நபரை பிடித்துள்ளனர். மேலும் பிடிபட்ட நபர் பெரியகுளம் அருகே உள்ள ஏ. வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (30), மேலும் தப்பி ஓடிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 36) என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபரை வைத்து புளியந்தோப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 25 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனை காவல்துறையினரும் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை பத்திரமாக மீட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பெரியகுளம் வடகரை காவல்துறையினர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டது' மேலும் வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட இவர்கள் திட்டம் தீட்டு உள்ளார்களா?
என்பது குறித்தும், மேலும் நாட்டு வெடிகுண்டுகள் குறித்து வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட 25 நாட்டு வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு செயல் இழக்க செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.