பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணியாற்றிய 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தும் மோசடி கணக்கு காட்டிய தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு கடந்த 10 ஆண்டுகளாக போலி பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகங்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம், தமிழ்நாட்டில் உள்ள 50% பொறியியல் கல்லூரிகளில் முழு நேரப் பேராசிரியர்கள் நியமனத்தில் மோசடி நடைபெற்று இருப்பதாக அண்மையில் குற்றம் சாட்டியது. ஒரே நேரத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் வரை ஒரே பேராசிரியர் பணிபுரியும் அதிர்ச்சித் தகவலும், 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் வேலை செய்யும் அவல விவரமும் ஆதாரத்துடன் அம்பலமானது.


அண்ணா பல்கலைக்கழக தளத்திலேயே ஆதாரம்


சென்னை மண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை https://www.annauniv.edu/cai/District%20wise/district/Chennai.php என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். இதிலும் https://www.annauniv.edu/cai/Options.php  இணைப்பைக் க்ளிக் செய்து பிற மண்டலங்களிலும் ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருவதை அறிய முடியும்.


https://www.annauniv.edu/cai/index.php என்ற இணைப்பில், Affiliated Colleges என்ற இணைப்பை க்ளிக் செய்து, இவற்றைக் காணலாம்.


உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்


இதுகுறித்துத் தகவல் அளித்த அறப்போர் இயக்கம் அமைப்பு, மோசடியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் மீது தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.


இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில் முறைகேடாகப் பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான் என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார்.


சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம்


இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்வு ரத்து, மோசடி செய்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் தடை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றிய 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட உள்ளது. மோசடி கணக்கு காட்டிய 224 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.