தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் நமீதா. விஜயகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நமீதா. இவர் தற்போது பா.ஜ.க.வில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இவர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது கணவருடன் மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று சாமிதரிசனம் செய்தார். இந்த சூழலில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


சாதி சான்றிதழ்:


அதில் அவர் கூறியிருப்பதாவது, சேகர்பாபுவுக்கு வணக்கம். இன்று நான் ஜென்மாஷ்டமியை கொண்டாடுவதற்காக மதுரை வந்துள்ளேன். மதுரை கோயிலுக்கு கிருஷ்ண வழிபாட்டிற்கு சென்று வந்தேன். ஆனால், அங்கு ஒரு விஷயம் அதிர்ச்சியாகிவிட்டது. இன்று வரை நான் நிறைய கோயில்களுக்கு சென்று வந்துள்ளேன். ஆனால், எந்த கோயிலும் இந்த மாதிரி பேசியதில்லை.


அங்குள்ள அதிகாரி உத்திரா என்னிடம் ரொம்ப மூர்க்கத்தனமாக, அசிங்கமாக பேசினார். என்னிடம் இந்து என்ற சான்றிதழும், உங்கள் சாதி சான்றிதழும் காட்டுங்கள் என்று கேட்டார். இன்று வரை என்னிடம் யாரும் இப்படி கேட்டதில்லை. ஏனென்றால், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் நமீதா இந்துவாக பிறந்தவர் என தெரியும். என்னுடைய திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.






சேகர்பாபுவுக்கு கோரிக்கை:


என்னுடைய குழந்தை பெயர் கிருஷ்ணா அதித்தயன் ராஜ். கிருஷ்ணாவின் பெயர்தான். இவ்வளவு பெரிய அதிகாரிக்கு எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னுடைய தாழ்மையான வேண்டுகோளை வைக்கிறேன்.


இவ்வாறு அவர் பேசினார்.


நமீதாவின் இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


2002ம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு படம் மூலமாக நடிகையாக அறிமுகமான நமீதா தமிழில் எங்கள் அண்ணா படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார். அஜித்துடன் சேர்ந்து பில்லா படத்திலும், விஜய்யுடன் சேர்ந்து அழகிய தமிழ் மகனிலும் நாயகியாக நடித்தார். கடைசியாக தமிழில் பொட்டு என்ற படத்தில் நடித்தார். 2016ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்த நமீதா பின்னர் அங்கிருந்து விலகி 2019ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.