இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் நடைபெற்ற 2 நாள் முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் சிலவற்றை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எந்த மதத்திற்கு திமுக எதிரானது அல்ல - திமுக


திமுக இந்து விரோத கட்சி என தொடர்ந்து அந்த கட்சி மீது பரப்புரைகள் மேற்கொண்டு வரும் நிலையில், திமுக எந்த மதத்திற்கு எதிரான இயக்கம் அல்ல என்பதை ஒவ்வொருமுறையும் தொடர்ந்து தெளிவுப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு துறையே திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இருப்பினும், ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் இந்த பிரச்னை என்பது புற்றீசல் மாதிரி மீண்டும் மீண்டும் கிளம்பும், இது கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையே முருகனின் வேலை கையில் எடுத்து பரப்புரை செய்யும் அளவுக்கு கொண்டுப்போனது.


ரவிக்குமாரின் கருத்தால் சர்ச்சை


இந்நிலையில், பழனியில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்களில் சில திமுக தோழமை கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி மக்களை உறுப்பினர் ரவிக்குமார் நேரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.






வி.சி..க எம்.பி ரவிக்குமார் எதிர்ப்பு


முத்தமிழ் முருகன் மாநாடு சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தைப் புகுத்தும் நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும் என அவர் தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அதோடு, தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் இந்து அடையாளத்துக்குள் நீண்ட கலத்துக்கு முன்பே உள்வாங்கப்பட்டுவிட்டார். முருகக் கடவுளுக்கு ஆடு அறுத்துப் படையிலிடப்பட்டது என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அப்படி பக்தர்கள் இப்போது படையிலிட முடியாது. முருகனும் மற்ற தமிழ்க் கடவுள்களும் இந்து அடையாளத்துக்குள் எப்போதோ உள்வாங்கப்பட்டுவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்


கல்வியை காவி மயமாக்கும் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் – ரவிக்குமார்


அதோடு, முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மாங்களுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 5வது தீர்மானமாக இயற்றப்பட்ட, முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது என்ற தீர்மானத்தையும் 8வது தீர்மானமான “ விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் 12வது தீர்மானமான “ முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது. என்பதையும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ள ரவிக்குமார், இது கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல என்று காட்டமாக குறிப்பிடுள்ளார்.


கல்வித் துறைக்குள் சமயத்தை திணிக்கும் முயற்சி


மேலும், இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


கூட்டணியில் சலசலப்பா ?


கலைஞர் நூற்றாண்டு நாணய விழாவிற்கு மத்திய பாஜக அரசின் அமைச்சர் ராஜ்நாத்தை அழைத்து வந்ததில் இருந்து திமுக – பாஜக இடையே மீண்டும் நட்பு ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், முருகன் மாநாடு பாஜகவின் செயல்திட்டத்தை அமல்படுத்தும் முயற்சி என எம்.பி.ரவிக்குமாரே நேரடியாக விமர்சித்துள்ளதால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்