தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை, பொம்மராஜபுரம், போடி, உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து இன்று காலை முதல் படிப்படியாக உயர்ந்துள்ளது. காலையில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணி அளவில் 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஏற்கனவே 70 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வந்த நீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதை எச்சரிக்கும் விதமாக, வைகை அணையில் பொருத்தப்பட்டுள்ள அபாய சங்கு 3 முறை ஒலிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் உபரியாக திறக்கப்பட்டது. அப்போது வைகை அணையின் பிரதான 7 மதகுகள் வழியாகவும், 7 சிறிய மதகுகள் வழியாகவும் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணை முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதையொட்டி பாதுகாப்பு கருதி அந்த தரைப்பாலம் மூடப்பட்டது.
Tamil Compulsory: இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணையில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்