மருமகள் வசம் இருக்கும் வீட்டை மீட்டு மாமனார், மாமியார் வசம் ஒப்படைக்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான இல்லத்தில் குடியிருந்து வருகிறேன்.இந்நிலையில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவரின் குடும்பத்தினர்  ஒன்றாக இணைந்து கொண்டு எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர்.


இந்நிலையில் எனது மாமனார் அம்பிகாபதியும், மாமியாரும் இணைந்து முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விதிகளின்படி மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் (DRO) நான் எனது மாமனார், மாமியாரை துன்புறுத்துவதாக மனு செய்து எனக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர். அந்த உத்தரவில் என்னை வீட்டை விட்டு  காவல்துறை உதவியுடன்  வெளியேற்றுமாறும், வீட்டை மீட்டு மாமனார் மாமியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய்  அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. முதியோர் பாதுகாப்பு  படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நீதிபதி, "மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007 விதியின்படி மூத்த குடிமக்களான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியான உறவோ, வாரிசோ கிடையாது. எனவே இந்த சட்டம் மருமகளுக்கு பொருந்தாது. ஆகையால் மருமகளை வீட்டை விட்டு வெளியேற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த  உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.


 




மற்றொரு வழக்கு


வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் மேல் முறையீட்டு வழக்கில், காவல் ஆய்வாளர் வசந்தி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.


இந்நிலையில்,  நீதிமன்றம்  நிபந்தனைகளை பின்பற்றாமல் சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளார். எனவே இவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று  மதுரை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், காவல் ஆய்வாளர் வசந்தி நீதிமன்ற நிபந்தனையை மீறி வழக்கின் எதிரிகளை சந்தித்து தனக்கு சாதகமாக சமாதானமாக போவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


இது நீதிமன்றத்தின் நிபந்தனையை மீறி சாட்சிகளை மிரட்டும் விதமாக உள்ளது. எனவே நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறி உள்ளார். எனவே இவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி மனு குறித்து காவல் ஆய்வாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.