போர்ச்சுக்கலில் கர்பிணியாக இருந்த இந்திய சுற்றுலாப்பயணி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலகியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .



போர்ச்சுக்கலில் உயிரிழந்த இந்திய கர்பிணி பெண் :


போர்ச்சுக்கலின் தலைநகர்  லிஸ்பனில்  34 வயதான இந்திய பெண் ஒருவர் நிறைமாத கர்பிணியாக இருந்த நிலையில் , மகப்பேறு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் மருத்துவமனையின் மகப்பேற்றுப் பிரிவு நிரம்பிவிட்டதால் இந்திய கர்பிணி பெண்ணை அங்கு அனுமதிக்காமல் வேறு மருத்துவமனைக்கு மாற்ற அறிவுறுத்தியிருக்கிறார்கள். சாண்டா மரியா மருத்துவமனையில் இருந்து தலைநகரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது . ஆனால் அந்த பெண் செல்லும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக  உயிரிழந்தார்.  எதிர்பார்க்காத வகையில்  நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதித்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் போர்ச்சுக்கலின் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்த துவங்கியது






பதவி விலகிய சுகாதாரத்துறை அமைச்சர் :


இந்த நிலையில் இந்திய சுற்றுலா கர்பிணி பெண் உயிரிழந்த சில மணி நேரத்திலேயே அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மார்டா டெமிடோ பதவி விலகியுள்ளார். ஏனென்றால் மகபேறுக்காக செல்லும் பெண்கள் , குழந்தைகள் உயிரிழப்பது இது முதல்முறை அல்ல. இதே போன்ற சம்பவம் அந்நாட்டில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படியான சூழலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த பத்திரிக்கைகள் மற்றும் எதிர் கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் , மூன்றாவது முறையாக சுற்றுலா பயணியும் உயிரிழந்ததுதான் அவரது  பதவி விலகலுக்கு  முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.  




காரணம் என்ன ?


2018 இல் சுகாதார அமைச்சரான மார்டா டெமிடோ கொரோனா பெறுந்தொற்று சமயத்தில் மத்திய-இடது சோசலிச அரசாங்கத்தின் மிகவும் பிரபலமான உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன . அவர் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயலாற்றினார் என்கிறது அந்நாட்டு ஊடகங்கள். இருப்பினும், சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை, குறிப்பாக மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் பொது மருத்துவமனைகளில் உள்ள பிற பிரச்சினைகள் காரணமாக அவசரகால மகப்பேறு சேவைகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தார். இதனால் சமீப நாட்களாக  மிகுந்த பின்னடைவை சந்தித்த நிலையில் , தற்போது பதவி விலகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.