பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை , அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


நடிகை கௌதமிக்கு, பொறுப்பு:



தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்த கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதையடுத்து, பாஜகவுடனான முரண்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார்.






அதிமுக அறிவிப்பு:


இந்நிலையில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் , நடிகை கௌதமிக்கு, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பும், தடா து. பெரியசாமிக்கு எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் இருவருமே, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலியும், அதிமுக விவசாய கழக பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசியும் நியமிக்கப்பட்டுள்ளார். 






2026 சட்டப்பேரவைத் தேர்தல்: 


2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது இருந்தே அதற்கான வேலையில் அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.   இந்த நிலையில் , கட்சிகளின் கொள்கைகளை பரப்புவதற்கு முக்கிய பொறுப்பாக கொள்கை பரப்பு செயலாளர் பதவி பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகை கௌதமிக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகை கௌதமி அனைவருக்கும் பரிட்சையமானவர் என்பதாலும், அரசியலில் அனுபவம் வாய்ந்தவர் என்பதாலும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கையில் ,அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 


மக்களவைத் தேர்தலில் , போட்டியிட வாய்ப்பு வழங்காத காரணத்தால் பாஜகவில் இருந்து தடா து. பெரியசாமி விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் இணைந்த இவருக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.