தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி அருவி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் பருவ மழை பெய்ததால் இன்று அதிகாலை முதலே அருவியில் அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.




இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று முதல் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதேபோல போடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும் பலத்த மழையின் காரணமாக தொடர்ந்து 10 நாட்களாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  நேற்று மாலைமுதல் விடிய , விடிய பெய்த கனமழையின் காரணமாக அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கெட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




இதேபோல் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நண்பகல் வேளையில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக அருவியல் குளித்த அனைவரையும் வனத்துறையினர் வெளியேற்றினர். பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான சோத்துப்பாறை  அணை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, , செழும்பாறு வனப்பகுதி, உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் நள்ளிரவு வரை  கனமழை பெய்ததோடு  இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது.




இந்த கனமழையால்  கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பு ஆறு உள்ளிட்ட ஆறுகளில் காற்றாட்டு வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் அனைத்தும் ஒன்றிணைந்து செல்வதால் பெரியகுளம் வராக நதி ஆற்றில் பெரும் வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மேலும் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் நீரின் அளவு சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.