ஜல்லிக்கட்டு போட்டி, கோயில் திருவிழாக்கள், பள்ளிவாசல் சந்தனக்கூடு விழாக்கள், பர்ஸ்ட் ஷோ தியேட்டர்கள் என தென்மாவட்டங்களில் Splendor பைக்குகளை குறிவைத்து திருடிவந்த Splendor திருடர்கள் இருவர் கைது செய்யப்பட்டு 21 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

சி.சி.டி.வியால் சிக்கினர்

 

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 20ஆம் தேதி செல்லூர் பூந்தமல்லி நகர் பகுதியைச் சேர்ந்த திலிப்குமார் என்பவர் நிறுத்தி வைத்திருந்த பைக்கை காணவில்லை என தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர் பைக் காணாமல் போன பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது காணாமல் போன பைக்கை ஒருவர் ஹெல்மெட் அணிந்து எடுத்து செல்வது தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக கோரிப்பாளையம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே நபர் அரசு மருத்துவமனையில் மற்றொரு பைக்கையும் திருடி செல்வதும் கோரிப்பாளையம் பகுதியில் கடந்து செல்வதும் சிசிடிவி காட்சிகளில் தென்பட்டுள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 20 நாட்களுக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தி பைக் திருடர்களை தேடி வந்த தல்லாகுளம் காவல்துறையினர்

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் நாகமலை புதுக்கோட்டை சின்னக்கண் நகர் பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். 

 

ஹெல்மெட் உதவியுடன் திருட்டு


 

இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கள்ளழகர் சித்திரை திருவிழா, கோரிப்பாளையம் சந்தனக்கூடு திருவிழா, தியேட்டர்களில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் கூட்டங்களையும், அரசு மருத்துவமனைகள், காய்கறி சந்தைகள், டாஸ்மாக்குகள், அரசு பொருட்காட்சிகள் என எங்கெல்லாம் கூட்டத்தை பார்க்கிறார்களோ, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை அலேக்காக தூக்கி விடுகின்றனர். காவலர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகவும் திருடும் பைக்குகளின் அருகில் உள்ள ஹெல்மெட்டுகளையும் திருடி, ஹெல்மெட்டுகளை அணிந்தபடி பைக்குகளை திருடி செல்வதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் சில பைக் மெக்கானிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் ஆர்டர் செய்யும் உபகரணங்களை திருட்டுப் பைக்குகளில் எடுத்துக் கொடுத்துவந்ததும், பைக்குகளை திருடிய சில நிமிடங்களில் நம்பர் பிளேட்டுகளை கழற்றியும், பைக்குகளை தனித்தனியாக பிரித்து அடையாளம் தெரியாத வகையில் ஆர்டரின் பெயரில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த பணத்தில் ஆடம்பரமாக செலவழித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

 

பைக் திருடுவதில் கில்லாடிகள்


 

இருவரும் தென் மாவட்ட முழுவதிலும் ஏராளமான பைக்குகளை திருடியது தெரியவந்த நிலையில் இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரிடமிருந்து 21 பைக்குகளை தல்லாகுளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இருவரும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகளை குறிவைத்து அதிக அளவிற்கு திருடி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கில்லாடி பைக் திருடர்கள் இருவரையும் கைது செய்த தல்லாகுளம் காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உசிலம்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் மதுரை மாநகர் பகுதிகளில் பைக் திருடிய இரு நண்பர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் குழுக்களாக செயல்பட்டு பைக்குகளை திருடி வந்தார்களா? என்பது குறித்தும் தல்லாகுளம் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குமார் மற்றும் பிரபு இருவரும் நண்பர்களாக இருந்து வந்ததாகவும், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பணத்தேவைகளுக்காக பைக்குகள் திருடுவதை  சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோ மூலமாகவும் ஆங்கிலத் திரைப்படங்களின் மூலமாகவும் பார்த்து கற்று திருட முயற்சி செய்துவந்துள்ளதாகவும், முயற்சி திருவினையாக்கும் என்பதை தவறாக கற்றுக் கொண்ட நண்பர்கள் இருவரும் பைக் திருடுவதில் மாஸ்டர் மைண்டாக  மாறியதாகவும் கூறப்படுகிறது.